அமெரிக்காவின் 605 அடி உயர கட்டடத்தில் முதல்முறையாக பறந்த மூவர்ண கொடி
அமெரிக்காவின் 605 அடி உயர கட்டடத்தில் முதல்முறையாக பறந்த மூவர்ண கொடி
UPDATED : ஆக 17, 2025 03:00 AM
ADDED : ஆக 17, 2025 01:36 AM

நியூயார்க்: இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, முதல்முறையாக அமெரிக்காவின் சியாட்டில் நகரின் முக்கிய சின்னமாகக் கருதப்படும், 605 அடி உயர, 'ஸ்பேஸ் நீடில்' மீது மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.
இந்தியாவின் 79வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் நாடு முழுதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுதும் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில் நம் சு தந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில், அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரின் நினைவுச் சின்னமான ஸ்பேஸ் நீடில் மீது மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. கடந்த, 1962ம் ஆண்டு உலக கண்காட்சிக்காக கட்டப்பட்ட ஸ்பேஸ் நீடில், பிரபலமான சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.
அமெரிக்காவில் உள்ள பிரபலமான நினைவுச் சின்னத்தில், ஒரு வெளிநாட்டு கொடி ஏற்றப்படுவது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சியில் சியாட்டிலில் உள்ள இந்தியத் துாதர் பிரகாஷ் குப்தா, மேயர் புரூஸ் ஹாரல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமில்லாமல் சியாட்டில் முழுதும் உள்ள பல முக்கிய கட்டடங்களும் இந்திய மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்தியாவின் சுதந்திர தினத்தை கவுரவிக்கும் ஒரு சிறப்பு அடையாளமாக, சியாட்டில், ஸ்போகேன், டகோமா மற்றும் பெல்லுாவுடன் சேர்த்து, 39 நகரங்களை உள்ளடக்கிய கிங் கவுன்டி, ஆக., 15ஐ இந்திய தினமாகக் குறிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது.

