'ஜனநாயகனுக்கு' சிக்கல்! உடனடியாக தணிக்கை சான்று வழங்க தனி நீதிபதி உத்தரவு; மேல்முறையீட்டில் தடை விதித்தது தலைமை நீதிபதி அமர்வு
'ஜனநாயகனுக்கு' சிக்கல்! உடனடியாக தணிக்கை சான்று வழங்க தனி நீதிபதி உத்தரவு; மேல்முறையீட்டில் தடை விதித்தது தலைமை நீதிபதி அமர்வு
UPDATED : ஜன 10, 2026 09:55 AM
ADDED : ஜன 10, 2026 06:34 AM

சென்னை: விஜய் நடித்த, ஜனநாயகன் திரைப்படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்குபடி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவால், பொங்கல் பண்டிக்கைக்கு, ஜனநாயகன் படம் வெளியாகுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய் நடித்த படம், ஜனநாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன., 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என, படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், படத்துக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது. சான்று வழங்க உத்தரவிடக் கோரி, படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக் ஷன்ஸ் எல்.எல்.பி., என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை, நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, நேற்று காலை பிறப்பித்த உத்தரவு: திரைப்படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின், படத்தை ஆய்வு செய்த குழு உறுப்பினர் புகார் அளித்துள்ளது, பிந்தைய சிந்தனை. இதுபோன்ற புகாரை ஏற்று கொண்டால், அது அபாயகரமானதாகி விடும்.
எந்தவொரு உறுப்பினரும், இதுபோன்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது, ஒரு ஆபத்தான போக்குக்கு வழிவகுத்து, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் புனிதத்தன்மையை சிதைத்து விடும். ஏற்கனவே படத்தை பார்த்து, தணிக்கை குழுவினர் தெரிவித்த மாற்றங்களை செய்த பின், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப, தணிக்கை வாரிய தலைவருக்கு அதிகாரம் இல்லை.
அதனால், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப, அவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. படத்துக்கு, உடனே தணிக்கை சான்று வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் தரப்பில், உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் வாதாடியதாவது:
வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியும், அதை வழங்காமல், உடனே தணிக்கை சான்று வழங்கும்படி, தனி நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோரிக்கை விடுக்காத நிலையில், அந்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்து உள்ளார். எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதாடினர்.
பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ''படத்திற்கு எதிரான புகார், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியக் குழு உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க முடிவு எடுத்து உள்ளனர்,'' என்றார்.
வழக்கு
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: தணிக்கை வாரியம் பதிலளிக்க அவகாசம் வழங்காமல், உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? படத்துக்கு தணிக்கை சான்று பெறும் முன், வெளியீட்டு தேதி அறிவித்தது ஏன்?
தணிக்கை சான்று வழங்க பல்வேறு நடைமுறைகள் இருக்கும்போது, சான்றுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். அதை விடுத்து, நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்து உள்ளீர்கள்; தணிக்கை சான்று இல்லாமல் எப்படி பட வெளியீட்டை முடிவு செய்தீர்கள்?
நீங்கள் பட வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக, எல்லாரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? தணிக்கை சான்று வழங்க உத்தரவிட கோரி, ஜனவரி 6ம் தேதி, பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.
வழக்கில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்ய போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். விசாரணையை வரும், 21ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

