த.வெ.க., ஆலோசனை கூட்டம்; உணவுக்கு தவித்த மகளிர் அணி
த.வெ.க., ஆலோசனை கூட்டம்; உணவுக்கு தவித்த மகளிர் அணி
ADDED : ஜூலை 08, 2025 03:21 AM

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மகளிர் அணியினரை மதிய உணவுக்கு தவிக்க விட்டது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, கட்சியை தயார்படுத்தும் பணிகளை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் செய்து வருகிறார். சமீபத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
இதனிடையே, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை அவசரமாக ஏற்பாடு செய்து, பொதுச்செயலர் ஆனந்த் நடத்தினார்.
இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணியினர் அதிக அளவில் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மதிய உணவு சாப்பிட, போதுமான ஏற்பாடுகள் செய்யவில்லை.
கோவில் திருவிழா உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் அன்னதானம் வழங்குவது போல் உணவு பரிமாறப்பட்டது. உணவும் போதிய அளவிற்கு இல்லை. இதனால், கையில் பாக்குமட்டை தட்டுடன், மதிய உணவுக்கு மகளிர் அணியினர் தவியாய் தவித்தனர்.
இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு வருவோருக்கு, உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார். ஆனால், உணவு ஏற்பாடுகளை, கட்சி பொதுச்செயலர் ஆனந்த் முறையாக மேற்கொள்வது கிடையாது.
ஏற்கனவே, மாமல்லபுரத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கட்சியினர் உட்கார நாற்காலி இல்லாமல், தலைவாழை இலை போட்டு நின்று கொண்டே சாப்பிட்டனர்.
இந்த வீடியோ வெளியாகி, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. மகளிர் அணியினர் பலர் பிஸ்கட், தண்ணீர் குடித்து பசியாறினர்.
தான் மட்டுமே எல்லா வேலைகளையும் பார்ப்பதாக விஜயிடம் ஆனந்த் காட்டிக் கொள்கிறார். இதை விஜயிடம் யார் எடுத்து சொல்வது என்பது தான் தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.