'மொபைல் போனில் தகவலை பகிரும்போது உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும்'
'மொபைல் போனில் தகவலை பகிரும்போது உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும்'
ADDED : அக் 18, 2024 06:11 AM

''மொபைல் போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களாக உள்ளனர். மொபைல் போனிலிருந்து ஒரு செய்தியை அல்லது தகவலை வெளியிடும்போது அல்லது பகிரும்போது, அது சரியானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.
இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டையொட்டி, 'டிராய்' எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, 'ஒலிபரப்புத் துறையில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு, டில்லியில் நேற்று நடந்தது.
இந்த கருத்தரங்கை, தகவல் ஒலிபரப்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சர் முருகன் துவக்கி வைத்து பேசியதாவது: தகவல் ஒலிபரப்புத் துறையில் ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நிகழ்கின்றன. இத்தகைய வியத்தகு முன்னேற்றங்கள், இத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை நாள்தோறும் ஏற்படுத்தி வருகின்றன.
'கன்டென்ட்' என்றழைக்கப்படும் உள்ளடக்கம் என்ற விஷயம் தான், எந்தவொரு ஒலிபரப்பு நிகழ்ச்சிகளுக்கும் முக்கியம். அதை வைத்து தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். மாறி வரும் தற்போதைய சூழ்நிலையில், அந்த உள்ளடக்க விஷயங்கள் தான் பார்வையாளர்களுக்கு முதன்மை மையமாக மாறியுள்ளன.
ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும்கூட இத்துறையை எளிதாக அணுகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆகியவற்றின் பங்களிப்பு மற்றும் அவை சார்ந்த உள்ளடக்க விஷயங்கள் அதிக அளவில் இடம் பெற வேண்டும். மேலும், ஒளிபரப்பு சேவைகள் அனைத்தும் அம்மக்களுக்கு எளிதாக கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் மிக அவசியம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார பரவலில் ஒலிபரப்புத் துறையின் பங்கு வலுவாக இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் உயர்தர ஊடக உள்ளடக்க விஷயங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
மொபைல் போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களாக உள்ளனர். மொபைல் போனிலிருந்து ஒரு செய்தியை அல்லது தகவலை வெளியிடும்போது அல்லது பகிரும்போது, அது சரியானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது, ஒவ்வொருவரின் தார்மீக கடமை. இந்த செய்தி அல்லது தகவல், யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையாவது பாதிக்குமா; நாட்டிற்கு எதிரானதா என்பதை உறுதி செய்த பிறகே செய்தியை அடுத்தவருக்கு பகிர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
-- நமது டில்லி நிருபர் -