துாத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: ஜாமினில் வெளிவந்த ஆயுள் கைதி மீண்டும் 'உள்ளே'
துாத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: ஜாமினில் வெளிவந்த ஆயுள் கைதி மீண்டும் 'உள்ளே'
ADDED : மார் 20, 2026 04:54 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், ஜாமினில் உள்ள ஆயுள் தண்டனை கைதி நேற்று கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, மார்ச் 10ம் தேதி இரவு திடீரென மாயமானார். மறுநாள் அங்குள்ள காட்டு பகுதியில், அவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
குளத்துார் போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில், மாண வி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. 'குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாணவி உடலை வாங்க மாட்டோம்' என, பெற்றோர், உறவினர்கள் மறுத்து வந்தனர். மேலும், இந்த படுகொலையை கண்டித்து, கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்தனர். அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்த வழக்கில், கொலையாளிகளை பிடிக்க, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், மாணவி கொலை வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்ம முனீஸ்வரன், 39, என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், எட்டையபுரம் தாலுகா, கீழஈரால் பகுதியில், 2020ல் காட்டில் தனியாக இருந்த, 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து, கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்ற வழக்கில், தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்த வழக்கில், தர்ம முனீஸ்வரனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து, 2024ல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல் முறையீடு செய்த அவர், தற்போது ஜாமினில் வந்துள்ளார். மகளிர் நீதிமன்றத்தில் கையெழுத்திட சென்ற இடத்தில், தர்ம முனீஸ்வரன், மாணவியை தாக்கி பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துாத்துக்குடி எஸ்.பி., மதன் கூறியதாவது: மாணவி கொலை தொடர்பாக, வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அறிவியல்பூர்வமாக, 98 கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். மேலும், 2,574 மொபைல்போன் அழைப்புகளை கண்காணித்து விசாரணை நடத்தினோம். கிராமத்தில் உள்ள, 461 பேரிடம் நேரடியாகவும், டிஜிட்டல் முறையிலும் தனித்தனியே விசாரணை நடத்தினோம்.
சம்பவம் நடந்த பகுதியில் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் குற்றவாளியை தற்போது கைது செய்துள்ளோம். அவருக்கு அரசியல் பின்புலம் ஏதும் இல்லை. வழக்கு நீதிமன்ற கண்காணிப்பில் உள்ளது. முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலை மட்டுமே கூற முடியும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.
இந்த வழக்கில், குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், மாணவியின் உடலை பெற, பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவி உடல், பெற்றோரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட உள்ளது.
