120 தொகுதிகளில் த.வெ.க., போட்டி; மாவட்ட செயலர்களை களமிறக்க முடிவு
120 தொகுதிகளில் த.வெ.க., போட்டி; மாவட்ட செயலர்களை களமிறக்க முடிவு
ADDED : பிப் 08, 2025 04:42 AM

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின், 120 மாவட்ட செயலர்களையும் வேட்பாளராக களமிறக்கவும், மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்கவும், விஜய் வியூகம் வகுத்துள்ளார்.
வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, கட்சியை விஜய் தயார்படுத்தி வருகிறார். இதற்காக, 38 மாவட்டங்களில், கட்சி ரீதியாக 120 மாவட்டச் செயலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக, ஐந்து கட்டமாக, மாவட்டச் செயலர்கள் தேர்வு நடந்து முடிந்துள்ளது.
மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து, விஜய் பேசி வருகிறார். பின்னர், பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதுவரை, 95 மாவட்டச் செயலர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். எஞ்சியுள்ள, 25 மாவட்டச் செயலர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், கூட்டணி ஆட்சி என்ற கருத்தை முன்வைத்தார். இதற்காக, சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு நடந்து வருகிறது. அதேநேரத்தில், விஜயை கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சியில், அ.தி.மு.க., தலைமையும் இறங்கிஉள்ளது.
ஆனால், தனது தலைமையில்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ள விஜய், தி.மு.க., கூட்டணியில் உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு துாண்டில் போட்டுள்ளார். இதுவரை எந்த கட்சியும், அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.
வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தனது புதிய படத்தை முடித்துவிட்டு, முழுவீச்சில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த, விஜய் தயாராகி வருகிறார்.
அப்போது, தனது கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்த பட்டியலை, விஜய் வெளியிடுவார் என, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கட்சியின் மாவட்டச் செயலர்கள் 120 பேரையும் வேட்பாளர்களாக களமிறக்கவும், அவர் முடிவெடுத்து உள்ளார்.
'ஆட்சியில் பங்கு' என்ற உத்தரவாதத்தை உறுதிப்படுத்தும் வகையில், எஞ்சியுள்ள 114 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க உள்ளதாவும், தேர்தல் செலவை அவரே ஏற்க இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.