ADDED : ஜூலை 23, 2025 02:43 AM

நடிகர் விஜய்க்கு, 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' என, பட்டம் சூட்டி, த.வெ.க., நிர்வாகிகள் அழகு பார்க்க துவங்கி உள்ளனர்.
'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் கட்சி துவக்கிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்கு, கட்சியை தயார்படுத்தி வருகிறார். கட்சிக்கு 120 மாவட்டச்செயலர்களை நியமித்துள்ளார்.
மேலும், 60,000 பூத்களுக்கு ஏஜன்டுகளையும், பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகளையும், நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரத்யேக செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதை விரைவில் அறிமுகம் செய்ய, விஜய் திட்டமிட்டு உள்ளார். ஆக., 25ம் தேதி மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்த, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
அடைமொழி இவையெல்லாம் முறையாக நடந்துவரும் நிலையில், விஜயை என்ன குறிப்பிட்டு அழைக்க வேண்டும் என்பதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜயை சந்தித்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், 'கட்சி போஸ்டர், பேனர், அழைப்பிதழ், விளம்பரம் உள்ளிட்டவற்றில் கட்சியின் தலைவரான உங்களை எப்படி குறிப்பிட்டு அழைக்கலாம்?' என யோசனை கேட்டுள்ளனர்.
கூடவே, 'மக்கள் தொண்டர், மக்கள் தளபதி, எழுச்சி தளபதி, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' என, பல அடைமொழிகளை எழுதி, அவரிடம் கொடுத்துள்ளனர். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
இதில், 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' அடைமொழியே நன்றாக இருப்பதாக, நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார் விஜய்.
இதையடுத்து, 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' என, கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் நடிகர் விஜயை அழைக்கத் துவங்கி உள்ளனர். இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
திரைப்படத்தில் ஆரம்ப காலத்தில், 'இளைய தளபதி' பட்டத்துடன் விஜய் அழைக்கப்பட்டார். அதன்பின், 'தளபதி' பட்டத்தை சூட்டிக் கொண்டார். அரசியலுக்கு வந்த நிலையில், அவருக்கு புதிய பட்டத்தை சூட்ட வேண்டும் என, தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்த்தனர். விஜயும், அதை விரும்பினார்.
இதையடுத்து, 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' என்ற அடைமொழியை அவரே தேர்வு செய்து, தகவல் சொல்லி விட்டார்.
பிரபலப்படுத்துவர் இது குறித்து, மாவட்டச்செயலர்கள் வாயிலாக, கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.
இனி, கட்சியின் மாநாட்டு பேனர்கள், சுவர் விளம்பரங்களில், இந்த வாசகத்தை அதிகளவில் எழுதி, மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலப்படுத்துவர். அரசியல் வியூகங்களில் இதுவும் ஒன்றுதான். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-நமது நிருபர்-