பழனிசாமிக்கு பதிலடி தரும் வகையில் கோவையில் த.வெ.க., மண்டல மாநாடு
பழனிசாமிக்கு பதிலடி தரும் வகையில் கோவையில் த.வெ.க., மண்டல மாநாடு
ADDED : டிச 04, 2025 05:25 AM

கோபியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பதிலடி தரும் வகையில், கோவையில் த.வெ.க., மண்டல மாநாட்டை நடத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் த.வெ..க., தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து, செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபியில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, பிரசார கூட்டத்தை நடத்தினார்.
கோபியில், அ.தி.மு.க., செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பழனிசாமியின் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'கோபி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், ஓட்டு வாங்குவதற்கு உங்களிடம் வந்தார். ராஜினாமா செய்வதற்கு உங்களிடம் கேட்டாரா?' என செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார்.
இதை தொடர்ந்து, பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோபி தொகுதியில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த , செங்கோட்டையன் ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கோபியில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்த செங்கோட்டையன், இது தொடர்பாக, த.வெ.க., மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோபியில் விஜய் பொதுக்கூட்டத்துக்கு, காவல் துறை அனுமதி கிடைப்பதில் பிரச்னை உள்ளது.
எனவே, கோபிக்கு பதில், கோவையில் வரும் ஜ னவரி மாதத்தில், த.வெ.க., மண்டல மாநாடு நடத்துவது குறித்தும், அதில், விஜயை பங்கேற்க வைப்பது குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -

