தே.ஜ., கூட்டணியில் த.வெ.க., விஜய்: முடிவு த்ரிஷா கையில்!
தே.ஜ., கூட்டணியில் த.வெ.க., விஜய்: முடிவு த்ரிஷா கையில்!
ADDED : மார் 17, 2026 05:22 AM

சென்னை: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்ப்பதற்கான கடைசி முயற்சியாக, நடிகை த்ரிஷா, மும்பையில் அமித் ஷாவிடம் பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க., தலைமையில் தனி கூட்டணி அமைத்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் போட்டி கொடுக்க, அக்கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டார். இதற்காக, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு எனவும் அறிவித்தார். ஆனால், அதை எக்கட்சியும் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், கரூர் உயிர் பலி சம்பவம் நடந்ததால், விஜயின் பிரசாரத்திலும் தொய்வு ஏற்பட்டது.
தி.மு.க.,வையும், அதன் தலைமையையும் கடுமையாக எதிர்த்து பேசிய நிலையில், தனித்து போட்டியிட்டு, தேர்தலில் தோல்வி அடைந்தால், அவர்களின் பழிவாங்கும் படலம் துவங்கும் என்று விஜய் அஞ்சுகிறார்.
இதற்கிடையே, பா.ஜ., தரப்பில், விஜயை வளைப்பதற்கான முயற்சிகள், அவருடைய தோழியான நடிகை த்ரிஷா வாயிலாக நடந்துள்ளன. கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணைக்காக, டில்லியில் இரண்டு நாட்கள் விஜய் முகாமிட்டு இருந்தார்.
அதற்கு ஒருநாள் முன்பாக, மும்பை சென்ற த்ரிஷா, அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நெருக்கடி இல்லாமல், சி.பி.ஐ., விசாரணையை முடித்து, விஜய் வீடு திரும்பியுள்ளார்.
அவரது, ஜனநாயகன் படத்தை வெளியிடுவதற்கும், நடிகை எடுத்த முயற்சிகள் பலன் அளித்துள்ளன. இதற்காக தணிக்கை குழுவினர், இன்று படத்தை மீண்டும் மறு தணிக்கை செய்ய உள்ளனர்.
இதேபோல, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மகன் மிதுன் வாயிலாகவும், நடிகையிடம் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக, அந்த நடிகை எடுக்கும் முடிவை எதிர்பார்த்து, த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

