தமிழகத்தில் 'தம்பி'கள் ஆட்சி; மத்திய அமைச்சர் முருகன் கிண்டல்
தமிழகத்தில் 'தம்பி'கள் ஆட்சி; மத்திய அமைச்சர் முருகன் கிண்டல்
ADDED : மே 23, 2025 04:22 AM

சென்னை: ''தமிழகத்தில் சார்களாலும், தம்பிகளாலும் ஆட்சி நடத்தப்படுகிறது,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
அண்ணா பல்கலையில் நடந்த பாலியல் சம்பவத்துக்கு, எந்த 'சார்' காரணம் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அரக்கோணத்தில் ஒரு சகோதரி பாதிக்கப்பட்டிருக்கிறார். அதிலும் பல சார்கள் இருக்கின்றனர்.
அவர்கள் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழக காவல் துறை, அந்த வழக்கை மூடி மறைக்கப் பார்க்கிறது.
அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழகத்தில் சார்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் யார் என தெரியவில்லை.
அதன் தொடர்ச்சியாக தற்போது 'தம்பி'கள் புறப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தம்பிகள் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த சார்களுக்கும், தம்பிகளுக்கும் என்ன தொடர்பு என்பதை, தி.மு.க., அரசு தெரிவிக்க வேண்டும்.
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு மிகப்பெரிய தண்டனை கிடைத்தது போல், அரக்கோணம் கல்லுாரி மாணவி பாதிக்கப்பட்ட வழக்கையும் சி.பி.ஐ., வசம் ஒப்படைத்து, அந்த சகோதரிக்கு நியாயம் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமலாக்கத் துறை என்பது சட்டப்படியான அமைப்பு. அந்த அமைப்பு சட்டப்படி, உச்ச நீதிமன்றத்தில் அமைப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்கொள்ளும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். குற்றவாளிகள் ஒரு நாளும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.
பா.ஜ., கூட்டணிக்கு எந்த கட்சிகள் வரும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால், அதையெல்லாம் தேசிய தலைமை சரியான நேரத்தில் முடிவு செய்யும்.
இவ்வாறு முருகன் கூறினார்.