தேசத்திற்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை: மத்திய அமைச்சர் முருகன் எச்சரிக்கை
தேசத்திற்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை: மத்திய அமைச்சர் முருகன் எச்சரிக்கை
UPDATED : ஜூன் 30, 2025 07:18 AM
ADDED : ஜூன் 30, 2025 02:06 AM

சென்னை: 'சமூக வலைதளங்களில், தேசத்திற்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் எச்சரித்தார்.
தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில், 'ஊடக சுதந்திர மாநாடு - 2025' என்ற தலைப்பில், சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே., சாலையில் உள்ள, நாரத கான சபாவில் கருத்தரங்கு நடந்தது.
இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று, இதழியல் டிப்ளமோ முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
ஊடக சுதந்திரம் என்பது, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒரு லட்சுமண ரேகை உள்ளது.
நம் தேச பாதுகாப்பு, ராணுவ ரகசியம், நட்பு நாடுகள் குறித்து தவறாக பேசக்கூடாது என, கட்டுப்பாடுகள் உள்ளன. இவை குறித்து தவறாக எழுதுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடந்த போது, சமூக வலைதளங்களில், தவறான கருத்துகளை பரப்பி வந்த, 8,-000க்கும் மேற்பட்டோரின், 'எக்ஸ்' வலைதள கணக்குகளை தடை செய்துள்ளோம். பலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்பரேஷன் சிந்துார் என்பது தேசம் சார்ந்த, ஒரு பெரிய நடவடிக்கை.
ராணுவம் சார்ந்த டெக்னாலஜி குறித்து பேச நாம் யார்? ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து, ராணுவ வீரர்களால் மட்டுமே பேச முடியும். தேசம் நமக்கு முதன்மையானது. அதற்கு எதிராக செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக வலைதளங்கள் வந்தபின், அனைவரும் ஊடகவியலாளர், அனைவரும், 'கன்டன்ட் கிரியேட்டர்' ஆகிவிட்டோம்.
ஆனால், ஒரு தகவலை பகிர்வதற்கு முன், அதன் உண்மைத் தன்மை குறித்து, பலரும் ஆராய்வதில்லை. அவற்றை அறிய வேண்டியது அவசியம்.
பத்திரிகைகளுக்கு பிரஸ் கவுன்சில் உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. ஆனால், சமூக வலைதளங்களுக்கு இதுபோன்ற அமைப்பும், கட்டுப்பாடும் கிடையாது.
ஊடகங்கள் டி.ஆர்.பி.,க்காக செயல்படாமல், பத்திரிகை தர்மத்திற்காக செயல்பட வேண்டியது அவசியம். ஊடகத்திற்கு சுதந்திரம், பொறுப்பு என இரண்டும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.