தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/வடகிழக்கு மாநிலங்களில் போணியாகாத காங்கிரஸ் வடை!

வடகிழக்கு மாநிலங்களில் போணியாகாத காங்கிரஸ் வடை!

வடகிழக்கு மாநிலங்களில் போணியாகாத காங்கிரஸ் வடை!


ADDED : ஏப் 05, 2024 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2024 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகியவை காங்கிரஸ் கோட்டையாக இருந்ததெல்லாம் பழங்கதை. கடந்த 2014ல் பா.ஜ.,வின் எழுச்சிக்கு பின், வடகிழக்கு மாநிலங்களில் காங்., சுடும் வடை போணியாவதில்லை.

குறிப்பாக, அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூரில் காங்., சூப்பர் ஸ்டார்களாக வலம் வந்த தருண் கோகோய், டோர்ஜி காண்டு, டி.டி.லப்பாங், முகுல் சங்மா, எஸ்.சி.ஜமிர், ஒக்ராம் ஐபோபி சிங் ஆகியோர் கட்சியின் முகங்களாக இருந்தனர்.

சூறாவளி


ஆனால், இன்றைக்கு மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில், காங்., அடையாளமின்றி அலைந்து கொண்டிருக்கிறது.

நாடு முழுதும் பா.ஜ., சூறாவளி வீசியபோது, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல செல்வாக்கு மிக்க காங்., மூத்த தலைவர்கள், பா.ஜ., பக்கம் கரை ஒதுங்கினர்.

அவர்களில் ஹிமந்த பிஸ்வ சர்மா, பெமா காண்டு, பைரேன் சிங் ஆகியோர் அசாம், அருணாச்சல் மற்றும் மணிப்பூர் முதல்வர்களாக இன்று 'செட்டில்' ஆகிவிட்டனர்.

வடகிழக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 25 லோக்சபா தொகுதிகளில், நான்கு தொகுதிகளில் காங்., தேறினால் பெரிய விஷயம் என்கின்றனர்.

அதில் முதலாவதாக இருப்பவர் கவுரவ் கோகோய். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அசாமின் காளியாபோர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வென்றார்.

சமீபத்தில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு பணியில், காளியாபோர் தொகுதி காணாமல் போனது.

அதற்கு பதிலாக, காசிரங்கா என்ற புதிய தொகுதி உதயமானது. காளியாபோரில் தேயிலை தொழிலாளர்களும், முஸ்லிம் வாக்காளர்களும் கணிசமாக இருந்ததால், அது காங்., கோட்டையாக இருந்தது.

தற்போதுள்ள காசிரங்கா தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக குறைந்துள்ளதால், ஜோர்ஹாட் தொகுதியை கவுரவ் கோகோய் தேர்ந்தெடுத்தார்.

இங்கு, இவரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் டோபோன் கோகோய்க்கு பலமான போட்டியாக உள்ளார் கவுரவ்.

இவரை தவிர, அசாமின் நாகாவ்ன் தொகுதியின் காங்., சிட்டிங் எம்.பி., பிரத்யுத் பர்டோலோய் மற்றும் குவஹாத்தியின் முதல்முறை வேட்பாளர் மீரா பர்தாகூர் ஆகியோர் பா.ஜ.,வுக்கு சவாலாக உள்ளனர்.

வாய்ப்பு


மேகாலயாவின் ஷில்லாங் லோக்சபா தொகுதியில், பா.ஜ., ஆதரவு பெற்ற தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் மசெல் அம்பரீன் லிங்தோ களம் இறக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிடும் காங்., வேட்பாளரும், சிட்டிங் எம்.பி.,யுமான வின்சென்ட் பாலா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

- நமது சிறப்பு நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us