உ.பி., இடைத்தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., தீவிரம்! புது வியூகங்களுடன் காய் நகர்த்த முடிவு
உ.பி., இடைத்தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., தீவிரம்! புது வியூகங்களுடன் காய் நகர்த்த முடிவு
ADDED : ஆக 10, 2024 11:33 PM

உத்தர பிரதேசத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை மாநில பா.ஜ., அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 'இண்டி' கூட்டணி தலைவர்களும் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளதால், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தேசிய அரசியலை நிர்ணயம் செய்யும் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்று உத்தர பிரதேசம். மொத்தம் 80 லோக்சபா தொகுதிகளையும், 403 சட்டசபை தொகுதிகளையும் கொண்டுள்ள, இந்த மாநிலத்தின் வெற்றி எப்போதும் எதிர்பார்ப்பு மிகுந்ததாகவே உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி செய்யும், இங்கு 10 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
கூட்டணி கட்சிகள்
இது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ., களம் இறங்கியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 33 இடங்களை பெற்றது. எதிர்க்கட்சியான இண்டி கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, காங்., 43 இடங்களை வென்றன.
இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி கட்சிகளின் தயவை பா.ஜ., நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இந்த சரிவை சரிக்கட்டும் விதமாக இடைத்தேர்தல் நடக்கவுள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் பிரசாரங்களை பா.ஜ., முடுக்கி விட்டுள்ளது. இதில், அயோத்தியில் உள்ள மில்கிபூர் மற்றும் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள கடேஹரி தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
மில்கிபூரில் எம்.எல்.ஏ.,வாக இருந்த சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யாகியுள்ளார். அதேபோல், கடேஹரி தொகுதி சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,வாக இருந்த லால்ஜி வர்மாவும் எம்.பி.,யாக மாறியுள்ளார்.
இந்த இரு தொகுதிகளிலும் தங்கள் வாரிசுகளை நிறுத்த இருவரும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே லோக்சபா தேர்தலில் இந்த தொகுதியை இழந்த பா.ஜ., சட்டசபை இடைத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்காக, கடந்த சில நாட்களாக அயோத்தி மற்றும் அம்பேத்கர் நகர் மாவட்டங்களில் முக்கிய நிகழ்ச்சிகளில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று வருகிறார்.
துறவியருடன் சந்திப்பு
சமீபத்தில் அயோத்தி சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 200க்கும் மேற்பட்ட திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அங்கு பேரிடர் மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதால், அதற்கான நிலங்களை அடையாளம் காணவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அங்குள்ள துறவிகள் பலரை சந்தித்த யோகி, இடைத் தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் பா.ஜ., நிர்வாகிகளுடன் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது பேசிய அவர், 'இடைத்தேர்தல் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். ஓட்டுச்சாவடி அளவில் பிரசாரங்களை வலுப்படுத்துவதிலும், வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் உள்ளதா என்பதை சரிபார்ப்பதிலும் தொண்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, தெருத்தெருவாக பிரசாரம் மேற்கொள்வதுடன், நவீன காலக்கட்டத்துக்கு ஏற்ப சமூக வலைதளங்களில் மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவும் பா.ஜ., தயாராகி வருகிறது.
அரசு திட்டங்களில் விடுபட்ட பயனாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தேவையை நிவர்த்தி செய்யவும் தொண்டர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் 2027ல் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, இடைத்தேர்தல் இருக்கும் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளும் பா.ஜ., தள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், அக்கட்சியை வீழ்த்த 'இண்டி' கூட்டணியும் தயாராகி வருவதால், உ.பி.,யில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது
- நமது சிறப்பு நிருபர் -.