பாதுகாப்பு மையங்களில் உற்சவர் சிலைகள்: நித்யபடி பூஜைகள் இன்றி தவிப்பு
பாதுகாப்பு மையங்களில் உற்சவர் சிலைகள்: நித்யபடி பூஜைகள் இன்றி தவிப்பு
ADDED : மார் 06, 2024 04:26 AM

பாதுகாப்பற்ற கோவில்களின் சன்னிதி இல்லாத உற்சவர் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதால், சுவாமிகளுக்கு நித்திய படி பூஜைகள் முறையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற, 550 கோவில்களில் பாடல் பெற்ற பழமையான தலங்கள், 220 உள்ளன. இவற்றில், 50 கோவில்களை தவிர மற்றவை வசதியின்றி, பாதுகாப்பின்றி உள்ளன. பிரதான கோவில்களை தவிர பிற பாதுகாப்பற்ற கோவில்களில் உள்ள பழமையான சிலைகள், தொடர்ந்து திருடப்பட்டு வந்தன.
இதை தடுக்கும் வகையில், அறநிலையத்துறையால், 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு, 8,500க்கும் மேற்பட்ட சிலைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அபாய மணி, ஆயுதம் தாங்கிய போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், கோவில்களிலும், 309 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், ஒவ்வொரு கோவிலும் பாதுகாப்பு அறை, 22.50 லட்சம் ரூபாய் நிதியில் கட்டப்படுகிறது.
இந்நிலையில், பல கோவில்களின் சன்னிதி இல்லாத உற்சவர்களின் சிலைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதால், சுவாமிகளுக்கு நித்திய படி பூஜைகள் முறையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது: வருமானம், பாதுகாப்பு இல்லாத பழமையான கோவில்களின் சிலைகள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், சன்னிதி இல்லாத உற்சவர் சிலைகளும் அடங்கும். அவற்றுக்கு நித்திய படி பூஜைகள் முறையாக நடப்பதில்லை. ஆனால், அறநிலையத்துறை சார்பில் பாதுகாப்பு மையங்களில், அர்ச்சகர்களால் சிலைகளுக்கு பூஜை செய்தவாக கூறுகின்றனர். ஒவ்வொரு கோவிலுக்கு ஒரு ஆகம விதிமுறை உள்ளது.
பல ஆகம விதிகளை கொண்ட கோவில் சிலைகள் ஒரே இடத்தில் வைக்கும் போது, அர்ச்சகர் எப்படி பூஜை முறைகளை மேற்கொள்ள முடியும். இது சாத்தியமில்லாத ஒன்று. பூஜைகளை முறையாக செய்யாவிட்டால், கடவுளை பட்டினி போடுவதற்கு சமம். எனவே, நித்திய படி பூஜைகள் செய்யப்படும் சிலைகளை, அந்தந்த கோவில்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கேயே முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
அறநிலையத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கோவில்களின் உற்சவர் சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. பாதுகாப்பற்ற கோவில்களின் பழமையான, கீர்த்தி பெற்ற சிலைகள் தான் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக பாதுகாப்பு மையம் முழுதும் தினமும் பராமரிக்கப்படுகிறது. பாதுகாப்பு மையம் அமைந்துள்ள கோவிலின் அர்ச்சகர்களை கொண்டே, உலோக திருமேனிகளுக்கு அபிஷேகம், ஆராதனை, வஸ்திரம் சாத்துதல் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
இது இல்லாமல் அந்தந்த கோவிலிலும் சிலை பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு வருகிறது. அது கட்டி முடித்தவுடன். சிலைகள் அந்தந்த கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு கூறப்பட்டது.
--நமது நிருபர்--

