96 கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலி: நிர்வாக பணிகள் பாதிப்பு
96 கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலி: நிர்வாக பணிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 06, 2025 02:15 AM

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 50 சதவீத முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய உயர் கல்வி ஆய்வு நிறுவன அறிக்கைப்படி, உயர் கல்வி மாணவர் சேர்க்கையில், 49 சதவீதம் பெற்று, இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
ஆனால், உயர்கல்வியில் ஆர்வமுடன் சேரும் மாணவர்களுக்கு, தரமான கல்வி கிடைக்கிறதா என்றால், அது கேள்விக்குறியாகவே உள்ளது.
அதற்கு, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், பேராசிரியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதே காரணம். தற்போது, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 50 சதவீத முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ், 180 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவற்றில், 90 கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன. ஜூன், 30ல், ஆறு கல்லுாரிகளின் முதல்வர்கள் ஓய்வு பெற்றனர்.
இதனால், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 96 ஆக உயர்ந்துள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்காததால் நிர்வாக பணிகள் பாதிக்கப்படுகின்றன.
- நமது நிருபர் -