ADDED : ஜூன் 28, 2026 12:51 AM

சென்னை: தி.மு.க., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்தார். ஆனால், அக்கட்சியின் இரு எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய மறுத்து விட்டனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், நான்கு தொகுதிகளில், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில், ம.தி.மு.க., போட்டியிட்டது. இவற்றில், சீர்காழி மற்றும் கடையநல்லுாரில் ம.தி.மு.க., வென்றது. தேர்தலில் தி.மு.க., கூட்டணி தோல்வி அடைந்தது.
தீர்மானம்
ஆட்சியை, தி.மு.க., இழந்ததையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய அரசு அமைந்தது. அந்த அரசுக்கு தி.மு.க., கூட்டணியில் இருந்த, காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன. காங்., வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகள், அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க., கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளைப் போல், ம.தி.மு.க.,வால் த.வெ.க., அரசில் இணைய முடியவில்லை; அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் வென்றதால், சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களாகவே கருதப்படுகின்றனர்.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, அவரது மகனும் கட்சியின் முதன்மை செயலருமான துரை ஆகியோர், தி.மு.க.,வுக்கு எதிரான கருத்துகளை, சமீபகாலமாக கூறி வந்தனர். த.வெ.க., அரசு மற்றும் முதல்வர் விஜயை பாராட்டினர். இந்நிலையில், ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், சென்னை, அண்ணா நகரில் நேற்று நடந்தது.
அதில், 'தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., விலகுவது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், வைகோ அளித்த பேட்டி:
தமிழகத்தில் பா.ஜ., ஆதிக்கம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே, கடந்த ஒன்பது ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் நீடித்தோம்.
அரசியல் மோசடி
ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க, தி.மு.க., பேச்சு நடத்தி உள்ளது. இதை மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதை விட மிகப்பெரிய அரசியல் மோசடி, வேறொன்று இருக்க முடியாது.
சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி, எங்களை தி.மு.க., நிர்ப்பந்தித்தது. மற்ற கூட்டணி கட்சிகளுக்கு, அந்த நிர்ப்பந்தம் இல்லை. இது ஆரோக்கியமான அரசியல் அல்ல. அந்த நேரத்தில், கூட்டணியில் இருந்து விலகியிருந்தால் தேவையற்ற பழி சுமத்தப்பட்டிருக்கும் என்பதால் அமைதியாக இருந்தோம்.
சீர்காழி எம்.எல்.ஏ., செந்தில் செல்வன், ம.தி.மு.க., வில் இருந்து விலகி தி.மு.க., வில் இணைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். கடையநல்லுார் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சட்டசபையில் ம.தி.மு.க., பிரதிநிதியாக செயல்பட போவதாக அறிவித்துள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்து களின் அடிப்படையில், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுவது என்றும், ஆளும் த.வெ.க., விற்கு முழு ஆதரவை அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
வரும் சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில், த.வெ.க.,வுடன் இணைந்து செயல்படுவோம். அவர்கள் நல்லது செய்தால் பாராட்டுவோம்; தவறு செய்தால் சுட்டிக்காட்டுவோம்.
நடவடிக்கை பா.ஜ., வுடன் இணையாத வரை, த.வெ.க.,வுடன் இணைந்து செயல்படுவோம். த.வெ.க., வில் இணைய, நான் 50 கோடி ரூபாய் பெற்றதாக, சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியா ன நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதி.மு.க.,வின் இரு எம்.எல்.ஏ.,க்களையும் ராஜினாமா செய்ய வைத்து, த,வெ.க., ஆதரவுடன் இடைத்தேர்தலை சந்திக்க, வைகோ திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ய மறுத்து விட்டனர்.
சென்னையில் நேற்று நடந்த ம.தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய, அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ, ''ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செந்தில் செல்வன், ராஜேந்திரன் ஆகியோரை அழைத்து, நீங்கள் இருவரும் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக, முதல்வர் விஜய் சொல்கிறார். ராஜினாமா செய்கிறீர்களா என, நான்கு முறை கேட்டேன். இருவரும் பதில் சொல்லவில்லை.
''கடந்த 45 ஆண்டுகளாக என் கூடவே இருந்த ராஜேந்திரனை கேட்டேன், 'வெற்றிபெற முடியாது' எனக்கூறி, ராஜினாமா செய்ய மறுத்து விட்டார். அதன்பின் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை,'' என்றார்.
