வைகோ நடைபயணம் இன்று துவக்கம்; தமிழக காங்., தலைவர் புறக்கணிப்பு?
வைகோ நடைபயணம் இன்று துவக்கம்; தமிழக காங்., தலைவர் புறக்கணிப்பு?
ADDED : ஜன 02, 2026 03:23 AM

திருச்சியில் இன்று, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ சமத்துவ நடைபயணத்தை துவக்குகிறார். நடைபயண துவக்க விழா அழைப்பிதழின் முன் அட்டையில், மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றுள்ளது.
'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலைக்கு காரணமான பிரபாகரனின் படம் போட்டிருக்கும் விழாவில், தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்றால் , காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரான செயலாக கருதப்படும். எனவே, நடைபயண துவக்க விழாவில் செல்வப் பெருந்தகை பங்கேற்கக் கூடாது' என, தமிழக காங்., நிர்வாகிகள் சிலர், தேசிய தலைமைக்கு புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, 'குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம்' என, டில்லி மேலிடத் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, வைகோவின் நடைபயண துவக்க விழாவில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்க மாட்டார்' என, தமிழக காங்கிரசார் கூறினர்.
இதற்கிடையில், தி.மு.க.,வுடனான காங்கிரஸ் மோதல் குறித்து கருத்துத் தெரிவித்த ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, நடைபயண துவக்க விழாவில் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்பு குறித்து எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
திருச்சியில் நேற்று வைகோ அளித்த பேட்டி: தமிழக நலனுக்காக, தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை தொடுத்து, வெற்றி பெற்றுள்ளேன். ஜாதி மத மோதல், தமிழகத்தில் மீண்டும் தலைவிரித்து ஆடுவதற்குரிய சூழலை சிலர் உருவாக்குகின்றனர். அதை தடுக்கவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ வேண்டும் என்பதற்காக, திருச்சியிலிருந்து நடைபயணம் துவக்குகிறேன்.
லட்சுமண ரேகையை தாண்டுகிற வழக்கம் எங்களுக்கு எப்போதும் இல்லை. எங்கள் எல்லையை தாண்டி நாங்கள் போகவில்லை, கூட்டணி தர்மம் தழைக்க, கூட்டணி தலைமையை மதித்து செயல்படும் கட்சியாக ம.தி.மு.க., விளங்குகிறது. கூட்டணி கட்சிகள் மனம் புண்படும்படி எந்த கருத்தையும் சொல்ல மாட்டோம். இவ்வாறு வைகோ கூறினார்.
ம.தி.மு.க., முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.,யுமான துரை அளித்த பேட்டி: தமிழகத்தின் பொருளா தாரம், தி.மு.க., அரசு குறித்து, காங்., தரவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்துக் களில் எந்த தரவும் இல்லை. அது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தேன். அவர் கருத்தை, செல்வப்பெருந்தகை, சசிகாந்த் செந்தில் போன்றோர் கண்டித்துள்ளனர்.
கூட்டணிக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் தர்ம சங்கடத்தை உருவாக்கும் கருத்தை, பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தேன். அரசியலைக் கடந்து, ராகுல் மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன் . அவருடன், எனக்கு நல்ல நட்பு உண்டு.
ம.தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும், எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. என் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூரிடம், விளக்கம் அளித்து விட்டேன். இவ்வாறு துரை கூறினார்.
- நமது நிருபர் -

