தி.மு.க.,வை போல் 'ஸ்டிக்கர்' ஒட்டும் வி.சி., பா.ஜ., குற்றச்சாட்டு
தி.மு.க.,வை போல் 'ஸ்டிக்கர்' ஒட்டும் வி.சி., பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : அக் 06, 2024 01:34 AM

சென்னை: தி.மு.க.,வை போல் பா.ஜ.,வின் திட்டங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், 'ஸ்டிக்கர்' ஒட்டுவதாக, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.
அக்கட்சி அறிக்கை:
கடந்த 2023 ஜூலை 27ல் பா.ஜ., வெளியிட்ட மது ஒழிப்பு வெள்ளை அறிக்கையில், 'தமிழகத்தின் அனைத்து தாலுகாவிலும் மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்; டாஸ்மாக் ஊழியர்களுக்கு பிற தொழில்களில் மறு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
மேலும், 'பூரண மதுவிலக்கு திட்டத்தை செயல்படுத்த, சுய உதவி குழுக்களில் இருந்து தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.
'மூன்று ஆண்டுகளில் மது உற்பத்தி, வினியோகத்தை, 75 சதவீதம் குறைப்பதற்கு திட்டமிட வேண்டும்.
'சட்ட விரோத மது விற்பனையை கட்டுப்படுத்த மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளை காவல் நிலையங்களாக மாற்ற வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு தீர்மானங்களாக, 'மது, போதைப் பொருள் மறுவாழ்வு மையங்களை அனைத்து தாலுகாவிலும் அமைக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 'மது கடைகளை மூட கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும். மது ஒழிப்பு பிரசாரத்திற்கு மகளிர் சுய உதவி குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க.,வை போல் பா.ஜ.,வின் திட்டங்களில், வி.சி., கட்சியும், 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.