ஐ.ஜி.,யை விமர்சித்து வி.சி., கட்சி போஸ்டர்: பதிவுத்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி
ஐ.ஜி.,யை விமர்சித்து வி.சி., கட்சி போஸ்டர்: பதிவுத்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி
ADDED : நவ 09, 2024 01:50 AM

சென்னை: துறை ரீதியான நிர்வாக நடவடிக்கைகளில், திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலையிடுவது, பதிவுத்துறை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பதிவுத்துறையில் நிர்வாக காரணங்கள் அடிப்படையில், சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம்.
பல வழிமுறைகள்
இதில் சம்பந்தப்பட்ட நபர், தன் தரப்பில் நியாயம் இருந்தால், அதை துறை ரீதியான விசாரணையின் போது தெரிவிக்கலாம்; தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்.
அத்துடன், அவர் அங்கம் வகிக்கும் சங்கம் வாயிலாக, மேல் அதிகாரிகளிடம் முறையிடுவது என, பல வழிமுறைகள் உள்ளன. இதில், அரசியல் கட்சியினர் தலையிடுவதற்கு, எந்த இடத்திலும் தேவையும், வாய்ப்பும் இல்லை.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் சார் - பதிவாளராக இருந்த பாண்டியன் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். நிர்வாக காரணங்கள் கருதி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளருக்கு ஆதரவாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான, தலித் இன பேரவை இறங்கியுள்ளது.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், பதிவுத்துறை ஐ.ஜி.,யின் ஜாதி பெயரை குறிப்பிட்டு, அவரை தரக்குறைவாக விமர்சித்து, 'பதிவுத்துறைக்கு கண்ணீர் அஞ்சலி' என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
தரக்குறைவானது
மேலும், துறையை விட்டு, ஐ.ஜி., உடனே வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை, ஜாதி பெயரை குறிப்பிட்டு தரக்குறைவாக விமர்சிப்பது, அரசு நிர்வாகத்தில் அரசியல் ரீதியான தலையீடாக அமைந்துள்ளது. இது, பதிவுத்துறை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான வி.சி.,யின் துணை அமைப்பு, திருமாவளவன் புகைப்படத்துடன், அரசின் உயர் அதிகாரி ஒருரை தரக்குறைவாக விமர்சித்து பிரசாரம் செய்வது, அரசு நிர்வாகத்தில் தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்தும்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.