நடக்காத விதிமீறலுக்கு வாகனங்களுக்கு அபராதம்; ‛நம்பர் பிளேட்' மோசடியால் போலீசாரும் திணறல்
நடக்காத விதிமீறலுக்கு வாகனங்களுக்கு அபராதம்; ‛நம்பர் பிளேட்' மோசடியால் போலீசாரும் திணறல்
UPDATED : ஏப் 16, 2025 03:42 AM
ADDED : ஏப் 15, 2025 11:28 PM

சென்னையில் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கும், விதிமீறலில் ஈடுபட்டதாக மொபைல் போன் எண்ணிற்கு அபராத ரசீது வருவது, ஓட்டுநர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மறுபுறம், வாகன எண்களை போலியாக பயன்படுத்தி மர்ம கும்பல் மோசடி செய்வது, போலீசாரையும் திணற வைத்துள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள், தினசரி தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை மடக்கி, அபராதம் விதித்து வருகின்றனர்.
3,000 'சிசிடிவி'க்கள்
அதேபோல, சென்னை முழுதும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் 'நம்பர் பிளேட்'டில் உள்ள, எண்களை படம் பிடித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும் வகையில், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, 3,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.
இதன் வாயிலாக, விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளின் மொபைல் போன் எண்களுக்கு அபராத தொகை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இந்த தொகையை ஆன் லைனில் வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும்; செலுத்தாவிட்டால் வாகனத்தை விற்கும் போது, மொத்த அபராத தொகையையும் செலுத்த நேரிடும்.
அபராத தொகையை வசூலிக்க உதவி கமிஷனர்கள் அலுவலங்களில் கால்சென்டர்களும் செயல்பட்டு வருகின்றன. அங்கு பணிபுரியும் போலீசார், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை செலுத்துவது பற்றி தொடர்ந்து நினைவுப்படுத்துவர்.
சமீபத்தில், விதிமீறலில் ஈடுபடாத வாகன ஓட்டிகளுக்கும், அபராத தொகை செலுத்தும் படி, அவர்களின் மொபைல் போன் எண்களுக்கு, தொடர்ந்து குறுஞ்செய்திகள் வருகின்றன. வாகனத்தை எடுத்துச் செல்லாத நிலையில் கூட, அந்த நாளில் வாகனம் ஓட்டியதாகவும், விதிகளை மீறியதாகவும் அபராதம் விதித்து குறுஞ்செய்தி வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நுாதன மோசடி
போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை, எங்களிடம் உள்ள செயலி வாயிலாக, 'நம்பர் பிளேட்' எண்களை படம் பிடித்து, அபராத தொகைக்கான ரசீதுகளை வழங்கி வருகிறோம். ஆனால், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள், வேறு நபர்களுக்கு சொந்தமான வாகனங்களின் பதிவு எண்களை, 'நம்பர் பிளேட்'டில் எழுதி வைத்து விடுகின்றனர்.
அதை, நாங்கள் செயலி வாயிலாக படம் பிடித்து அபராதம் விதிக்கும் போது, வாகன உண்மையான உரிமையாளரின் மொபைல் போன் எண்களுக்கு குறுஞ்செய்தி சென்று விடுகிறது. 'நான் வெளியூரில் இருந்தேன். ஆனால், சென்னையில் சாலை விதிகளை மீறியதாக எனக்கு ஏன் அபராதம் விதித்து உள்ளீர்கள்' என, வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
அப்போது தான், 'நம்பர் பிளேட்' மாற்றி, இப்படியொரு நுாதன மோசடி நடப்பது எங்களுக்கு தெரிய வந்தது. இந்த மோசடி கும்பல்வாகன எண்களை மாற்றி வைத்து, வேறு ஏதும் குற்ற செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. இது பெரும் சவாலாகவே உள்ளது.
சமீபத்தில், இத்தகையை மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுபோன்ற குளறுபடி இருந்தால், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, வாகன ஓட்டிகள் விபரம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
செய்யாத குற்றத்திற்குதண்டனையா?
வாகன ஓட்டிகள் கூறியதாவது: முன்பெல்லாம் 'ஹெல்மெட்' அணியாமல் சென்றால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அபராத தொகை, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு விட்டது. இதுபோல், விதிமீறலுக்கான அபராத தொகை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
நம்பர் பிளேட் குளறுபடி மற்றும் மோசடி நபர்களால், அப்பாவிகளுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. நாங்கள் விதிமீறலில் ஈடுபடவில்லை என, போலீசாரிடம் சொன்னாலும் நம்ப மறுக்கின்றனர். வாகனத்தை பறிமுதல்செய்து விடுவோம் என, மிரட்டுகின்றனர். செய்யாத குற்றத்திற்கு தண்டனை தருவது சரியா. இவ்வாறு அவர்கள் கூறினர்.
![]() |
- நமது நிருபர் -