'விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி': வீடு வீடாக பிரசாரத்தை துவங்கியது அ.தி.மு.க.,
'விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி': வீடு வீடாக பிரசாரத்தை துவங்கியது அ.தி.மு.க.,
ADDED : ஜன 29, 2026 05:23 AM

சென்னை: தி.மு.க.,வின் பிரசாரத்தை எதிர்கொள்ள, 'விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி' என்ற பிரசாரத்தை அ.தி.மு.க., நேற்று துவக்கியுள்ளது.
அதன்படி, வீடு வீடாக செல்லும் அ.தி.மு.க., நிர்வாகிகள், தமிழகத்தில் மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி போன்றவை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் எவ்வளவு; இப்போது எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?
குடும்பத்தின் மாத சராசரி செலவு 2021ல் எவ்வளவு; இப்போது எவ்வளவு என்பதை கேட்கின்றனர். அந்த விபரங்களை, 'ஏ.ஐ.ஏ.டி.எம்.கே., கனெக்ட்' என்ற மொபைல் போன் செயலியில் பதிவு செய்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை, கையடக்க சாதனத்தில் 'பிரின்ட்' எடுத்து கொடுத்து வருகின்றனர்.
இந்த பிரசாரம் தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளை விளக்கி சொல்லவே இந்த பிரசாரம். அதற்கான முன்னெடுப்பும், அதை தொடர்ந்து களப் பணிகளும் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

