மாநிலம் முழுவதும் 100 நிர்வாகிகளை நியமிக்க விஜய் அதிரடி திட்டம்
மாநிலம் முழுவதும் 100 நிர்வாகிகளை நியமிக்க விஜய் அதிரடி திட்டம்
ADDED : பிப் 23, 2024 04:07 AM

சென்னை: மாநிலம் முழுதும், 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, 100 நிர்வாகிகளை நியமிக்க, நடிகர் விஜய் முடிவெடுத்து உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில், புதிய கட்சியை நடிகர் விஜய் துவங்கியுள்ளார்.
தலைவராக விஜயும், பொதுச்செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., புஸ்ஸி ஆனந்தும் செயல்படுகின்றனர்.
கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. மாநில அளவிலான மற்ற நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, மாநிலம் முழுதும், 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய் முடிவெடுத்து உள்ளார். இதற்காக, மொபைல்போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
உறுப்பினர் சேர்க்கையில், மாவட்ட தலைவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என, சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
முதற்கட்டமாக, பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இதுவரை சிறப்பாக செயல்பட்டு, மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள, 100 நிர்வாகிகளை நியமிக்கவும், ரகசிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த, 100 நிர்வாகிகளை தேர்வு செய்ய, பல்வேறு நிபந்தனைகளையும் விஜய் விதித்துள்ளார்.
அதன்படி, உறுப்பினர் சேர்க்கை நிர்வாகிகளுக்கு மாற்று கட்சியில் தொடர்பு இருக்கக்கூடாது; போலீசில் வழக்கு இருக்கக்கூடாது; பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.
விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்ட கால நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என, நிபந்தனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் 100 நிர்வாகிகளையும் அழைத்து, விஜய் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது.