sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தி.மு.க - அ.தி.மு.க., சுமக்கும் இலவசம் என்ற அசிங்கத்தையே விஜயும் சுமக்கிறார்

/

தி.மு.க - அ.தி.மு.க., சுமக்கும் இலவசம் என்ற அசிங்கத்தையே விஜயும் சுமக்கிறார்

தி.மு.க - அ.தி.மு.க., சுமக்கும் இலவசம் என்ற அசிங்கத்தையே விஜயும் சுமக்கிறார்

தி.மு.க - அ.தி.மு.க., சுமக்கும் இலவசம் என்ற அசிங்கத்தையே விஜயும் சுமக்கிறார்

10


ADDED : மார் 23, 2026 05:51 AM

Google News

10

ADDED : மார் 23, 2026 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

திருவொற்றியூரில் இருந்து காரைக்குடிக்கு தொகுதி மாறியதற்கான காரணம் என்ன?


எனக்கு தொகுதிகளில் வித்தியாசமில்லை. திருவொற்றியூரில் நான் வெல்லக்கூடாது என, பெரும் முதலாளிகள் வேலை செய்தனர். தற்போது நா.த.க., வெற்றி பெற, 35 தொகுதிகள் சாதகமாக உள்ளன. அதில் முக்கியமானது காரைக்குடி. என் சொந்த ஊர் என்பதால், எனது வெற்றியை அங்கிருந்து துவக்க அதை தேர்வு செய்தேன்.

தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தாலும், தனித்து போட்டி என்பதில் விடாப்பிடியாக இருப்பது ஏன்? கட்சியினர் சோர்வடைந்து விட மாட்டார்களா?


எனக்கு இருக்கும் தமிழ் தேசிய தாகம், நா.த.க., பிள்ளைகளுக்கும் இருக்கிறது. அதை அடையும் வரை, யாரும் சோர்வடைய மாட்டார்கள்.

ஆட்சியில் இருக்கும் கட்சி சரியில்லை. எம் மக்களின் உரிமையை பறிக்கின்றனர் என்றுதான், ஒவ்வொரு கட்சியும் துவக்கப்படுகிறது. பின், எதிர்த்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது. சீட்டுக்கு நோட்டுக்கும் கூட்டணி போகும் கட்சிகள் மாற்று இல்லை; ஏமாற்று.

நாம் தமிழர் கட்சி, தமிழரின் அரசியல் விடுதலைக்காக துவக்கப்பட்டது. அதை அடையாமல், தேர்தல் வெற்றிக்காக கூட்டணி சமரசம் செய்தால், என்னுடன் ஒருவர் கூட நிற்க மாட்டார்கள். வெல்லும் வரை எல்லாமே வீண் முயற்சி என்பர். வென்ற பின் விடாமுயற்சி என்பர். நான் வென்றே தீருவேன்.

அதிகாரம் என்று வரும்போது, உள்ளாட்சி அதிகாரமும் முக்கியமானது. இன்று வரை, அந்த விஷயத்தில் நா.த.க., ஏன் கவனம் செலுத்தவில்லை?


மாநிலத்தில் நல்லாட்சி அமைந்து விட்டால், உள்ளாட்சியே அவசியமில்லை. ஆனால், முன்பை விட உள்ளாட்சி தேர்தலுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

இலவச அறிவிப்புகள் கிடையாது என்பது போல், தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால், உதவித்தொகை, அரசு வேலை என உங்கள் அறிக்கையும் சொல்கிறதே...


இலவசம் தான் தமிழகத்தின் சாபக்கேடு. ஸ்டாலின் 1,000 ரூபாய் கொடுக்கிறார். பழனிசாமி 2,000 ரூபாய் தருவேன் என்கிறார். நேற்று வந்த விஜய் 2,500 ரூபாய் தருவேன் என்கிறார். இதுபோன்ற ஓட்டு பிச்சை எடுக்கும் இலவச அறிவிப்புகளை, நான் ஒருபோதும் கொடுக்க மாட்டேன்.

நாட்டின் பசியை போக்க உழைத்த விவசாயிக்கு, அவன் உழைக்க முடியாத காலத்தில், உதவித்தொகை கொடுப்பது தவறில்லை. சாராயம் விற்பதை அரசு வேலையாக ஏற்றுக்கொள்ளும் உங்களால், சாப்பாடு போடும் விவசாயத்தை அரசு வேலையாக ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கால்நடை என்பது நடமாடும் வங்கி. பாலும், முட்டையும் இருக்கும் நாட்டில், பசி என்பதே இருக்காது. தரமான கல்வி, மருத்துவம், துாய குடிநீர், உணவை ஒரு அரசால் கொடுக்க முடியும். இதுதான் எங்கள் அரசியல் லட்சியம். அதற்கான வாக்குறுதிகளையே கொடுத்துள்ளேன். இதில் கவர்ச்சி இல்லை.

ஈ.வெ.ரா.,வை தமிழக கட்சிகள் எல்லாம் போற்றும்போது, நீங்கள் கடுமையாக எதிர்க்க என்ன காரணம்?


ஈ.வெ.ராமசாமி பற்றி, 12 ஆண்டுகள் ஊர் ஊராக பிரசாரம் செய்தேன். பிரபாகரனை சந்தித்த பின், தமிழ் தேசிய கொள்கை என்னை பற்றியது. ஆகப்பெரும் இலக்கியம் கொண்ட என் தமிழை, 'சனியன், அதை விட்டு ஒழியுங்கள், அந்த காட்டுமிராண்டி மொழியில் என்ன இருக்கிறது' என்கிறார் ஈ.வெ.ரா.

தமிழ், தமிழர், தமிழர் அரசு என்று சொல்வது, இன எழுச்சிக்கு எதிரானது என்கிறார். எந்த இனத்தை சொல்கிறார் என்று பார்த்தால், திராவிடம் என்கிறார். தமிழை அழித்து திராவிடம் வளர்க்க வேண்டுமா?

பிராமணர்கள் நமக்கு கீழானவர்கள். கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் நமக்கு எதிரானவர்கள் என்கிறார். அப்போதுதான், இந்த சனியனை ஒழிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். என் மொழியை போற்றிப் புகழ்ந்து பாடிய மகாகவி பாரதியை கையில் எடுத்தேன்.

'ஜாதி பார்த்து போடும் ஓட்டு எனக்கு தீட்டு' என முற்போக்கு சிந்தனை பேசும் நீங்கள்; நா.த.க., வேட்பாளர்கள் இன்ன ஜாதியை சேர்ந்தவர் என சொல்லி வருவது முரண்பாடு இல்லையா?


ஜாதி அரசியலானால், அங்கு சமத்துவம் சகோதரத்துவம் இருக்காது. மதமே அரசியலானால், அங்கு மனிதநேயம் இருக்காது. பணமே அரசியலாக இருந்தால், பண்பாடு சிதைந்துவிடும். இந்த மூன்றிலும் சிக்கியிருக்கும் தமிழக அரசியலை, மீட்டு எடுக்கிறோம். ஜாதி பார்த்து எனக்கு ஓட்டு போடாதே என்று சொல்லும் தைரியம் எனக்கு மட்டும்தான் உள்ளது. நான் ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை. நா.த.க., அப்படி செயல்படுகிறது என்று சொல்வது அர்த்தமற்றது.

உங்களை வீடு வரை கொண்டு வந்து விட்டு, விஜய் கூட்டணி பேசினார் என்று அடிக்கடி சொல்கிறீர்கள். இருவரும் கூட்டணி சேராதது ஏன்?


கட்சி துவங்கும்போது என்னை சந்திக்க விருப்பப்பட்டார். அண்ணன் என்கிற முறையில் சந்தித்தேன். என் கட்சியின் கொள்கை, கோட்பாடு குறித்து கேட்டார். மொழி பற்றியும் இனம் பற்றியும் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

த.வெ.க., சார்பில் நடத்தப்பட்ட விக்கிரவாண்டி முதல் மாநாட்டில், விஜய் உங்களை தாக்கிப் பேசியது எதற்காக?


விஜய் பாவம். அவருக்கு ஒன்றுமே தெரியாது. எழுதிக் கொடுப்பதை படிக்கிறார். ஜான் ஆரோக்கியசாமி தான் அவரை வழிநடத்துகிறார். விஜயை சந்திக்கும்போது, 'இது கொஞ்சி விளையாடும் மீன்கள் மட்டும் இருக்கும் குளம் அல்ல. ஆளை விழுங்கும் முதலைகள் உள்ள குளம்' என்று எச்சரித்தேன். இருந்தாலும், என்னையே தாக்கினார். அதுவரை பொறுமையாகவே இருந்தேன்.

ஆனால், தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று என சொன்னதும், இவனை விடக்கூடாது என முடிவெடுத்தேன். திராவிடம் எனும் குப்பையை, வெளியே தள்ளிக் கொண்டிருக்கும்போது, அதை சுமந்து கொண்டு, மீண்டும் வீட்டுக்குள் வருபவனை விடக்கூடாது என்றே அவருக்கு பதில் அளித்தேன்.

முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்தது ஏன்? அதன்பின்பே, விஜய் எதிர்ப்பை நீங்கள் கூர்தீட்டியதாக சொல்லப்படுகிறதே...


இந்த வாதம் ஏற்புடையது இல்லை. மு.க.முத்து மறைவுக்காக, அவரது சகோதரர் ஸ்டாலினிடம் துக்கம் விசாரித்தேன். அவ்வளவுதான். சபரீசனை நான் சந்தித்தது இல்லை. தி.மு.க., என்னை, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., கைக்கூலி என்கிறது. அ.தி.மு.க-., - பா.ஜ., -- த.வெ.க., என்னை தி.மு.க., கைக்கூலி என்கிறன.

ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்யும், இந்த அற்ப அரசியல்வாதிகளை ஒழிக்க வந்தவர்கள் நாங்கள். அதனால், எங்கள் மீது எல்லா சாயத்தையும் பூசுவர்.

விஜயின் அடிப்படை கொள்கையிலே பிரச்னை இருக்கிறது. தி.மு.க-., - அ.தி.மு.க.,வுக்கு மாற்று என கூறி, இலவசம் என்று அவர்கள் துாக்கி சுமந்த அசிங்கத்தையே விஜயும் துாக்கிக் கொண்டு வருகிறார். மக்களை ஏமாற்றும் மோசடிக்காரர்களை அம்பலப்படுத்துவதுதான் என் வேலை.

கடந்த 2016ல் முதல் தேர்தலில் 1.1 சதவீத ஓட்டுகளை பெற்றீர்கள். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 8.22 சதவீதம் பெற்றீர்கள். வரும் சட்டசபைத் தேர்தலில், அதை கடப்பீர்களா?


நிச்சயமாக. எங்களின் வெற்றி தள்ளிபோகிறதே தவிர, வெற்றியே பெறமுடியாது என்னும் நிலை இல்லை. நான் புகழ் பெற்ற நடிகன் இல்லை. அரசியல் தலைவரின் வாரிசு இல்லை. ஒரு கட்சியை உடைத்து கட்சி துவக்கவில்லை. ஒரு எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, அடிபட்டு, மிதிபட்டு, கொள்கையால் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து நிற்கிறோம். இந்தியாவை யார் ஆளவேண்டும் என்ற தேர்தலில், என்னை தேடி வந்து ஓட்டு போட்ட என் தமிழ் மக்கள், தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்ற தேர்தலில் என்னை கைவிட மாட்டார்கள்.

நீங்கள் 'திரள் நிதி திரட்டும் நபர்' என்ற விமர்சனம் இருக்கிறதே...


நா.த.க.,வை திரள் நிதி கட்சி என்று சொல்வதில், எனக்கு பெருமைதான். திரள் நிதி என்பது திருட்டு நிதியைவிட மேன்மையானது. மாநாட்டுக்கு காசு கொடுத்து அழைத்து வரும் கட்சிகளுக்கும், மாநாட்டுக்கு வந்து காசு கொடுக்கும் எங்கள் கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் மக்கள் இயக்கமாக இருக்கிறோம். மக்கள் காசு கொடுக்கின்றனர். அவர்கள் பெரும் முதலாளிகளுக்காக கட்சி நடத்துகின்றனர். அதனால், அவர்கள் உங்களுக்கு காசு கொடுக்கின்றனர்.

மற்ற கட்சியினர் சிந்தனைக்கே எட்டாத விஷயங்களை எல்லாம் எடுத்து மாநாடு நடத்துகிறீர்களே... மரம், மாடு, கடலுக்கெல்லாம் மாநாடு நடத்துகிறீர்களே...


நிலம், நீர், நெருப்பு காற்று, ஆகாயம் கலந்த மயக்கம்தான் உலகம். இந்த பேராற்றல்தான், உயிர்கள் வாழ அடிப்படை தேவை என்பதை அறிவியலும் சொல்கிறது; ஆன்மிகமும் சொல்கிறது. மரம் மட்டும்தான், உயிர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை கொடுக்கிறது. அது இல்லையென்றால், எந்த உயிர்களும் இல்லை. நான் காடு, கடல் மாநாடு நடத்துவது, இந்த மக்கள் வாழ்வதற்குதான். போதிக்கும்போது புரியாதது பாதிக்கும்போது புரியும்.

அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்வது சரியா?


தமிழ் தேசியம்தான் என் கொள்கை. அதிலிருந்து நான் எப்போதும் மாறியது இல்லை. கொள்கையை மெருகேற்ற, சிலவற்றை கழிக்கவேண்டி உள்ளது. அது உங்களுக்கு மாற்றிக் கொள்வதுபோல தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us