விஜய் ரசிகர்கள் தீபாவளி கொண்டாடியாச்சு... தி.மு.க., நிர்வாகிகளுக்கு அள்ளித்தந்தாச்சு
விஜய் ரசிகர்கள் தீபாவளி கொண்டாடியாச்சு... தி.மு.க., நிர்வாகிகளுக்கு அள்ளித்தந்தாச்சு
UPDATED : அக் 29, 2024 06:23 AM
ADDED : அக் 29, 2024 05:33 AM

''சித்ராக்கா... திருப்பூர்ல ஆளும்கட்சி நிர்வாகிகளுக்கு, தீபாவளி போனஸ் கிடைச்சிருச்சாம் தெரியுமா?''
மித்ரா 'சரவெடி'யைக் கொளுத்தத் துவங்கினாள்.
''மாநகரப் பகுதிச் செயலாளர்களுக்கு 'செல்வ' வி.ஐ.பி.,யும், மாநகர வி.ஐ.பி.,யும் தலா ரெண்டு லட்சம் ரூபா கொடுத்திருக்காங்க...
''வார்டுச்செயலாளர்களுக்கு ரெண்டு பேரும் தலா 50 ஆயிரம் ரூபாயும், மாவட்ட நிர்வாகிகள் அஞ்சு பேருக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும் வழங்கியிருக்காங்களாம்.
''இதனால உற்சாகத்துல மிதக்குறாங்களாம் உடன்பிறப்புகள்''
'ஓசி' பட்டாசுக்கு
அதிகாரி தடை
''மித்து... உனக்கு போனஸ் கிடைச்ச மாதிரி சந்தோஷப்படுறியே... பாண்டியன் நகர் வெடிவிபத்து சம்பவத்தால, பட்டாசுக்கடைகளுக்கு அனுமதி கொடுக்கறதுல உயரதிகாரி மேடம் கறாரா இருந்திருக்காங்க தெரியுமா...
''பட்டாசு பாக்ஸ் 'ஓசி'ல கேட்டு யாரு வந்தாலும், தனக்குத் தகவல் வந்துடணும்ன்னு சொல்லியிருக்காங்களாம். இதனால, 'ஓசி' எண்ணத்தில இருந்த போலீஸ்காரங்க, டுபாக்கூர் ஆளுங்க தவியாய்த் தவிக்கிறாங்களாம்''
''சித்ராக்கா... மீடியாகாரங்கள்ல ஒருதரப்பை கூப்பிட்டு, தனது வார்டு அலுவலகத்துல வச்சு, தீபாவளிக்கு பணமும், ஸ்வீட் பாக்ைஸயும் மாநகர 'வி.ஐ.பி.,' கொடுத்தாராம். அது சர்ச்சை ஆயிருச்சாம்.
''தோழர் கட்சி சார்புல, ஒப்பந்தத் துாய்மைப்பணியாளருக்கு ஊதியம் கேட்டு மாநகராட்சி முன்னாடி போராட்டம் நடந்துச்சு. 'தொழிலாளருக்குக் கொடுக்க பணமில்ல... ஆனா, 'அவங்களுக்கு' கொடுக்க மட்டும் பணம் இருக்குதோன்னு வசைபாடிட்டாங்களாம்.
''இதனால, மாநகர வி.ஐ.பி., டென்சன் ஆயிட்டாராம்''
மித்ரா சிரித்தாள்.
''மித்து... திருப்பூர்ல இருக்கற ஒரு அரசுப்பள்ளில, அதிகாலை வாக்கிங் போறவங்க இணைஞ்சு தீபாவளி கொண்டாடியிருக்காங்க.
காலைல வாங்கிங் முடிஞ்சவுடன, டிபனுக்கு கிடாக்கறி விருந்து நடந்திருக்கு.
பள்ளி பணியாளர்கள் மற்றும் ஏழைகளுக்குத் தீபாவளிப் பரிசு வழங்கியிருக்காங்க...''
''அடடே பரவால்லையே... நல்ல விஷயம்தானே''
சித்ரா பாராட்டினாள்.
போதை ஏட்டு
'செல்பி' விவகாரம்
''மித்து... கே.வி.ஆர்., நகர் ஸ்டேஷன்ல ஒரு ஏட்டு போதைலயே தான் இருக்காராம். பல இடங்கள்ல இதனால பிரச்னையாம். சமீபத்தில, செக்போஸ்ட் அருகே ரோட்டில் சென்ற பெண்ணோட 'செல்பி' எடுக்கப்போய் மக்கள் போராட்டம் பண்ற அளவுக்குப் பிரச்னை பெரிசாயிடுச்சு... போலீஸ் அதிகாரிங்க சமாதானப்படுத்தியிருக்காங்க...
''ஸ்டேஷன் டூட்டி மட்டும் இப்ப போட்டிருக்காங்க...
''குடும்பப்பிரச்னையால மன உளைச்சல்ல இருக்காராம். கவுன்சிலிங் கொடுக்கணும்னு போலீஸ்காரங்களே சொல்றாங்க...''
''சித்ராக்கா... மங்கலம் பக்கத்துல பள்ளமா இருக்குற மாவட்டத்தின் எல்லை பகுதி துவங்குற ஊர்ல, ரோட்டோரம் வெளிச்சம் இல்லாத இடத்தில சில போலீஸ்காரங்க நின்னு வாகன ஓட்டிகளைப் பிடிக்கிறாங்களாம்.
''ஊருக்குள்ள பால், காய்கறி வாங்க வர்றவங்களைப் பிடிச்சு வசூல் நடக்குதாம். சட்டைப்பையை நிரப்பின பின்னாடிதான் கெளம்புறாங்களாம்.
''மாநகர நுண்ணறிவு பிரிவு, முழுக்க கமிஷனர் கட்டுப்பாட்டில் இயங்குது. நகர்ல என்ன நடந்தாலும் சரியான நேரத்துல தெரியப்படுத்தணும். ஆனா, அங்க இருக்கிற நுண்ணறிவு அதிகாரி இப்படி நடக்கிறத 'இருட்டிப்பு' செஞ்சுடறாரு... அதே விஷயம் நல்ல விஷயங்களையும் மூடி மறைச்சுடறாருங்கறாங்க''
ரகசியத்தைச் சொன்னாள் மித்ரா.
'துாள் பறக்குது'
குட்கா விற்பனை
''மித்து... குமார் நகர்ல இருந்து போயம்பாளையம் செல்ற மின் புதைவட வழித்தடத்துல ஏற்பட்ட பழுதை அம்பது நாளுக்கு மேலாகியும் மின்வாரியத்தினரால சீரமைக்க முடியலையாம்.
''இதனால, அங்க தொடர்ந்து மின் தடை ஏற்படுதாம். புதைவட கேபிள் பராமரிப்பு பணிக்கு, மாநகராட்சி அனுமதி வழங்க தாமதமாகிறதுதான் இதுக்குக் காரணம்ங்கறாங்க...
''மாநகராட்சி கமிஷனர் இல்லாததால, பணிகளை மேற்கொள்ள முடியலைன்னு சொல்றாங்களாம் மின் வாரியத்துக்காரங்க''
''சித்ராக்கா... 'ஆனந்த' எம்.எல்.ஏ.,வுக்குச் சொந்த தொகுதிக்குள்ள இருக்கிற ஊர்ல வீடு இருந்தாலும், பெரும்பாலும் திருப்பூர்ல தான் இருக்காராம்.
''அவரைப் பார்க்க முடியாத மக்கள், ஏதாவது பிரச்னைன்னா, திருப்பூருக்குப் பார்க்க வர்றாங்களாம்.
''அப்படி வர்றவங்கள, எம்.எல்.ஏ., 'ரெஸ்ட்'ல இருக்காருன்னு சொல்லித் திருப்பி அனுப்பிச்சிடறாங்களாம்.
''சொந்தத் தொகுதில இருந்தா எதுக்கு இங்க வர்றோம்ன்னு மக்கள் புலம்புறாங்களாம். இது அவருக்குத் தெரியுமான்னு தெரியல''
''மித்து... பல்லடம் பக்கத்துல இருக்குற 'புதுார்கரை', 'பாளையம்கணபதி' ஊராட்சிகள்ல, பெட்டிக்கடை, மளிகைக்கடைகள் சிலவற்றுல குட்கா விற்பனை களைகட்டுதாம். குட்கா சப்ளை பண்ற கும்பல்ல அஞ்சு பேரு கையும் களவுமா சிக்குனாங்க... ஆனா நாலு பேரு தப்பிச்சுட்டாங்க... ஒருத்தரு மட்டும் சிக்குனாரு.
''இப்ப அவரும் ஜாமீன்ல வந்து மீண்டும் வேலையை ஆரம்பிச்சுட்டாராம். தொழிலாளர்களைக் குறிவைச்சு குட்காவை வித்து செம லாபம் பார்க்குறாங்களாம்.
''கடும் நடவடிக்கை எடுக்கலேன்னா குட்கா விற்பனை தொடரத்தான் செய்யும்''
யதார்த்தத்தைப் பகிர்ந்தாள் சித்ரா.
அலுவலகத்தில்
கொடிக்கம்பம்
''சித்ராக்கா... 'நாசிஅவி' ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலக வளாகத்திலயே, ஊழியர் சங்கக் கொடிக்கம்பம் நட்டு வச்சு கொடியேத்தியிருக்காங்க... அரசு அலுவலக வளாகத்துக்குள்ள சங்கக்கொடிக்கம்பம் இருக்கக்கூடாதுன்னு தெரிஞ்சும் யாரு அனுமதி அளிச்சாங்கன்னு தெரியல...
''நாசிஅவி ஊர்ல மேற்கு ரத வீதில ஆக்கிரமிப்பு ஜாஸ்தி... மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்னு மின்வாரியமே ரோட்டை ஆக்கிரமிச்சுருச்சு... அனைத்து ரத வீதிகள்லயும் தனியார் ஆக்கிரமிப்பும் பெருகிடுச்சு... நெடுஞ்சாலைத்துறையும், பேரூராட்சியும் ஒருத்தரை ஒருத்தர் கைகாட்டிட்டு தப்பிச்சுடுறாங்க... ஆக்கிரமிப்புனால தேரோட்டம் நடத்தறதே சிரமமாயிரும்ன்றாங்க''
''மித்து... நம்ம பேசுறதாவது யார் காதுலயாவது விழுதான்னு பார்ப்போம்''
''சித்ராக்கா... ஒரு விவசாயிகள் சங்கத்தோட நிறுவனர் சமீபத்தில ஒரு அறிக்கை விட்டுருக்காரு...
''எங்களோட சங்கம் அரசியல் கட்சி, ஜாதி, மதம் சார்பற்ற அமைப்பு. மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட அரசியல் கட்சிகளாலதான், விவசாயிகளோட நிலைமை மோசமா இருக்கு... அரசியல் சார்பற்று கோரிக்கை சார்ந்து பயணிக்கிறோம்.
''ஆனா நிர்வாகிகள் சிலர், கட்சிப் பொறுப்புகளில் இருப்பதை மறைச்சு சங்க பொறுப்புகள்ல இருக்கறாங்க... அவங்க கட்சிப்பொறுப்பில் இருந்து விலகாட்டி சங்கப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவீங்கன்னு வெளிப்படையா அறிவிச்சிருக்காரு... 'ஈசனே' ஆச்சர்யமாத்தான் இருக்கு''
''மித்து... திருப்பூர்ல விஜய் ரசிகருங்க நிறைய பேரு, விஜய் கட்சி மாநாட்டுக்குப் போயிருக்காங்க போல''
''ஆமாக்கா... விஜய் பேச்சுனால ரொம்ப குஷியா இருக்காங்க... இப்பவே தீபாவளி வந்தாச்சுன்னு பட்டாசு வெடிச்சு கொண்டாடிட்டாங்களாம்''
''சித்ராக்கா... எலக்ஷன் வந்ததுக்கப்புறம் குஷி இருந்தாதான் அது நிஜம்... பார்ப்போம்...பார்ப்போம்... சரி... விஜய் பேச்சு பட்டாசா இருந்துச்சா இல்லையா...''
''அதப்பத்தி எனக்குத் தெரியாது... நீ பட்டாசு கிப்ட் பாக்ஸ் தருவேன்னு வெயிட் பண்றேன்''
''அப்ப... இந்த வருஷம் மட்டுமில்ல... அடுத்த வருஷம் தீபாவளிக்குக் கூட கிடைக்காது... பரவால்லையா''
இருவரிடமும் வெடிச்சிரிப்பு.