த.வெ.க., வேட்பாளர்கள் தேர்வு; நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு; த.வெ.க., தனித்து போட்டி
த.வெ.க., வேட்பாளர்கள் தேர்வு; நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு; த.வெ.க., தனித்து போட்டி
ADDED : ஜன 31, 2026 04:57 AM

சென்னை: த.வெ.க., சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்ய, நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
த.வெ.க., கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு, 'ஆட்சியில் பங்கு வழங்கப்படும்' என, கடந்தாண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. ஓராண்டு ஆகவுள்ள நிலையில், இன்னும் எந்த கட்சியும், த.வெ.க., கூட்டணியில் இணையவில்லை. மேலும், எந்த கட்சியுடனும் வெளிப்படையாக பேச்சும் நடத்தவில்லை.
எதிர்பார்ப்பு
தேர்தலுக்கான கால அவகாசம் குறைவாக உள்ளது. த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் எடுத்த கூட்டணி முயற்சிகளும் கைகூடவில்லை.
கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்ற எதிர்பார்ப்பும் கைகூடுமா என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, தனித்து போட்டியிடும் நிலைக்கு த.வெ.க., தள்ளப்பட்டு உள்ளது. இந்நிலையில், தேர்தல் அறிக்கை தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் குழு, நாளை முதல் 11ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இது மட்டுமின்றி, ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள மூன்று வேட்பாளர்களை ரகசியமாக தேர்வு செய்ய, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் தயாரித்து அளிக்கும் பட்டியலில் இருந்து, ஒருவரை த.வெ.க., வேட்பாளராக விஜய் அறிவிக்க உள்ளார்.
வேட்பாளர்களில் 50 பேரை மகளிராக அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். தி.மு.க.,வின் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் ஓட்டுகள் சிதறும் என வியூகம் வகுத்து, இதை செய்ய முடிவெடுத்துள்ளார்.
போராட்டம்
இதற்கிடையில், அடுத்த மாதத்தில் மீண்டும் பிரசார சுற்றுப்பயணம் துவங்கும் விஜய், முதல் கட்டமாக வேலுார், தர்மபுரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு செல்கிறார்.
அதேபோல், தி.மு.க., அரசுக்கு எதிராக, மாவட்ட வாரியாக போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2-ம் தேதி, கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி முடிந்த பின், இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் கூறின.

