மா.செ.,க்களுக்கு அரசியல் பயிற்சி வகுப்பு நடத்த விஜய் திட்டம்
மா.செ.,க்களுக்கு அரசியல் பயிற்சி வகுப்பு நடத்த விஜய் திட்டம்
ADDED : ஏப் 01, 2025 04:10 AM

சென்னை: விஜய் பேசும்போது, த.வெ.க., மாவட்டச் செயலர்கள், சினிமா பார்க்கும் மனநிலையில் ஆர்ப்பரிப்பதும், விசிலடித்து ஆட்டம் போடுவதும், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட, கட்சியை விஜய் தயார்படுத்தி வருகிறார். அத்துடன் தேர்தல் செலவுக்காக, ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
தன் ரசிகர் மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்கள், தன் நம்பிக்கையானவர்களின் உறவினர்களுக்கு, மாவட்டச் செயலர் பதவிகளை விஜய் வழங்கியுள்ளார். இதுவரை விஜயை திரைப்படங்களிலும், திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்வுகளிலும் மட்டுமே பார்த்து ரசித்த அவரது கட்சியின் மாவட்டச் செயலர்கள், தற்போது அருகே பார்த்து வருகின்றனர்; அதனால், உற்சாகம் அடைந்து விடுகின்றனர்.
கட்சி நிகழ்ச்சிகளில் விஜய் பேசும்போது, மாவட்டச் செயலர்கள் அவரது இருக்கையின் பின்புறம் அல்லது கீழே முதல் இரண்டு வரிசைகளில் அமர வைக்கப்படுகின்றனர். விஜய் பேசும்போது, எழுந்து நின்று விசில் அடிப்பதுடன், தோளில் போட்டுள்ள துண்டை தலைக்கு மேல் துாக்கி சுழற்றி ஆரவாரம் செய்கின்றனர்.
இவர்களை பார்த்து, பின்புறம் அமர்ந்திருக்கும் மற்ற நிர்வாகிகளும் இதே நடவடிக்கையை தொடர்கின்றனர். விஜய் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது, தியேட்டரில் செய்யும் வேலைகளை, கட்சி நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலர்கள் செய்வது, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.
தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணியினர், இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
கட்சியின் மாவட்டச் செயலர்களின் நடவடிக்கைகளை பார்த்து, புதிதாக கட்சியில் சேர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா, நிர்மல் உள்ளிட்டோர் அதிர்ச்சியாகி உள்ளனர். மாவட்டச் செயலர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தும்படி, பொதுச்செயலர் ஆனந்திடம் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
ஆனால், எவ்வளவு சொன்னாலும், மாவட்டச் செயலர்கள் சினிமா பார்க்கும் மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை. எனவே, கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

