தி.மு.க., மீதான பழைய குற்றச்சாட்டுகளை நினைவூட்டிய விஜய்!
தி.மு.க., மீதான பழைய குற்றச்சாட்டுகளை நினைவூட்டிய விஜய்!
ADDED : செப் 08, 2026 06:25 AM

சென்னை : ''தி.மு.க.,வின் போலி பிம்பத்தையும், போலி 'பிராண்ட்'டையும் உடைப்போம்,'' என, முதல்வர் விஜய் ஆவேசமாக பேசினார்.
சட்டசபையில் நேற்று, காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர், சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் காட்டி, முந்தைய தி.மு.க., அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பெண்களே காரணம்
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். அதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே, 40 நிமிடங்கள் ஆவேசமாக முதல்வர் விஜய் பேசியதாவது:
அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை வைக்கலாம்; அவற்றை மக்கள் பார்த்துக் கொள்வர். ஆனால், தனிப்பட்ட நபர்களை, பெண்களை தரந்தாழ்ந்து பேச வேண்டாம். சமீப காலமாக, தமிழகத்தில் ஆபாச நதி, வன்ம நதி ஓடிக் கொண்டிருக்கிறது. பெண்களை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுவதை, மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
நம் வீட்டில் தாயாக, அக்கா, தங்கையாக இருப்பதும் அதே பெண்கள் தான். இதை மனதில் கொண்டு பேச வேண்டும். நான் இந்த நிலைக்கு வர பெண்களே காரணம்.
எனவே, பெண்களை அவதுாறாக பேசினால், சட்டம் தன் கடமையை செய்யும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நான் பேசவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இதே சட்டசபையில், இதே எதிர்க்கட்சியால் அவமானங்களை சந்தித்துள்ளார் என்பதை கேள்விப்பட்டு உள்ளோம். எதிர்காலத்தில் இதுபோல எந்தப் பெண்ணுக்கும் நடந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
எதற்காக அரசியல்
சில நாட்களுக்கு முன் ஒரு எம்.எல்.ஏ., சட்டசபைக்கு உள்ளேயே, 'எலும்பை உடைப்பேன்' என, எலும்பு சிகிச்சை நிபுணர் போல பேசியுள்ளார். தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர், 'தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்காத மக்களுக்கு நல்ல சாவே வராது' என்றார்.
இவ்வளவு காலமாக தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டது, அதே மக்கள் தான். இப்படி பேசி பேசித் தான் எதிர்க்கட்சியாக இருக்கின்றனர். மக்கள் தீர்ப்பை ஏற்க மனம் இல்லாதவர்கள், எதற்காக அரசியலில் இருக்க வேண்டும்?
ஆபாச நதி, வன்ம நதி ஓடும் வகையில் பேசியதை, அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், நாங்கள் பேசாத பேச்சா என்று நியாயப்படுத்துகின்றனர். இது தவறு என்பதையே அவர்கள் உணரவில்லை. கவிஞர் கண்ணதாசன், 'பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை' என, சொல்லியிருக்கிறார். அது தான் தி.மு.க.,
த.வெ.க., யாருடைய தனிப்பட்ட அடையாளமாகவும் இருக்காது. தமிழ், தமிழர், தமிழ்நாடு தான் எங்கள் அடையாளம். 'மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வர்; தம் மக்கள் நலம் என்றே தான் கருத்தில் கொள்வர்' என்பது, எம்.ஜி.ஆர்., படப்பாடல். அதை மாற்றிச் சொல்கிறேன்.
'மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வோம்; தமிழக மக்கள் நலம் ஒன்றே தான் கருத்தில் கொள்வோம்' என்பது தான் எங்கள் கொள்கை. அதனால் தான், 'மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா தொட மாட்டோம்; தொட்டவர்களையும் விட மாட்டோம்' என்று கூறினோம்.
தி.மு.க., ஆட்சியில், 1970களில் வீராணம் திட்டத்தில், 'டெண்டர்' வேண்டுமானால், 2.5 சதவீதம் கமிஷன் கேட்டதாகவும், ஏழு தவணைகளில் 29 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்றைய முதல்வர் கருணாநிதி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம்
கடந்த 2021 - 2026 வரையிலான தி.மு.க., ஆட்சியில், 7.5 - 10 சதவீதம் வரை கட்சி நிதி வசூலிக்கப்பட்டது பற்றி, அமலாக்கத்துறை அறிக்கையில் ஆதாரங்களுடன் கூறப்பட்டுள்ளது. அன்றைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் அதன் நேரடி பயனாளர்கள் என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க., மேடைகளில், 'தி.மு.க., இருக்கும் இடத்தில் தவறு இருக்காது' என்பர். ஆனால், தி.மு.க., இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும்; தவறு நடக்கும் இடத்தில் தான் தி.மு.க., இருக்கும். சரியாக, ஒழுங்காக விஞ்ஞான முறையில் அவர்கள் தவறுகள் செய்துள்ளனர்.
தி.மு.க., ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினால், 'ஆதாரம் கொடுங்கள்' என்று தான் கேட்பரே தவிர, நாங்கள் இதுவரை ஊழல் செய்ததில்லை என்று சொல்ல மாட்டார்கள்; ஊழல் செய்தவர்கள் தான் ஆதாரம் கேட்பர்.
தி.மு.க., எவ்வளவு அவதுாறு பேசினாலும், நாங்கள் அவ்வளவு கீழே போய் பேச மாட்டோம். ஆனால், அரை நுாற்றாண்டுக்கு கீழே சென்று, ஆழமாக தோண்டித் துருவி, மக்களை ஏமாற்றும் தி.மு.க.,வின் போலி பிம்பத்தையும், போலி 'பிராண்ட்'டையும் உடைப்போம். இதை எச் சரிக்கையாக அல்ல; அன்பாக சொல்லிக் கொள்கிறோம்.
கடந்த 1967ல் அண்ணாதுரை, 1977ல் எம்.ஜி.ஆர்., 1982ல் என்.டி.ராம ராவ், 2026ல் விஜய் என்று சொல்லிக் கொள்கிறேன். இறைவனும் இயற்கையும், மக்களும் எப்போதும் எங்கள் பக்கம் தான் இருப்பர். அதனால், யார் என்ன செய்தாலும் எடுபடாது. மக்களின் அன்புக்கு முன், தி.மு.க., தோற்பது உறுதி. பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை; மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவே வந்திருக்கிறேன்.
கடந்த 2021 - 2026 ஆட்சியில் குற்றங்களில் ஈடுபட்ட தி.மு.க.,வினர், ஆதரவாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படவில்லை. பல வழக்குகளில் எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்னையாக்கிய பின்னரே, முதல் தகவல் அறிக்கை பதிவு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
குற்றச்சாட்டுகளுக்கு வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது, வெளிப்படை தன்மை, பொறுப்புணர்வு, செயல்பாடுகளால் பதிலளித்து வருகிறோம். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். ஆளுங்கட்சியினராக இருந்தாலும் குற்றச்சாட்டு எழுந்தால், வழக்குப்பதிவு செய்துள்ளோம்; தேவையான இடங்களில் கைது செய்து, கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
