ADDED : ஜன 15, 2026 03:39 AM

''முரண்பாடு உள்ளவர்களை சேர்த்துக் கொண்டால், கூட்டணி வலிமையாக இருக்காது,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
டில்லியில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., நாம் தமிழர் கட்சி என, நான்கு பிரதான கூட்டணிகள் உள்ளன. தேர்தலுக்கான நேரம் நெருங்க நெருங்க, வாக்காளர்கள் யோசிப்பதை கணிக்க வேண்டும்.
தி.மு.க., வேண்டாம் என கருதும் வாக்காளர்கள், எங்கள் கூட்டணியை ஆதரிப்பர். அதையே மனதில் வைத்து விஜயும், சீமானும் உழைக்கின்றனர்.
தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்றே நிறைய கட்சிகள் பாடுபடுகின்றன. ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, கோட்பாடு உள்ளது. அதனால், அனைத்து சக்திகளும் ஒன்றுபடுவதில் சிக்கல் உள்ளது. தி.மு.க., வேண்டாம் என்று சொல்லும் த.வெ.க.,வின் விஜய், யார் வேண்டும் என்பதை சொல்ல வேண்டும்.
கூட்டணி பலப்பட வேண்டும் என்பதற்காக, முரண்பாடு உள்ளவர்களை கூட்டணிக்குள் ஒன்றிணைத்தால், அதுவும் பிரச்னை தான். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி இரண்டையும் கலந்து, வெஜ் பிரியாணி என கூறி கொடுத்தால், அது எப்படி இருக்கும்? அப்படித்தான், முரண்பாடு உடையோரை கூட்டணியில் சேர்த்தால் குழப்பம் ஏற்படும்; கெமிஸ்ட்ரியும் இருக்காது.
நடிகர் விஜயை நான் சாதாரணமாக எடை போடவில்லை. அதேபோல, சீமானையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளர் யார் என்றே சொல்லாமல், 8.5 சதவீதம் ஓட்டு வாங்கி உள்ளார்.
தமிழகத்தில் நான்கு முனை போட்டி இருந்தாலும், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி இடையே தான் வலுவான போட்டி இருக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-- நமது டில்லி நிருபர் --

