தேர்தலை சந்தித்ததும் யதார்த்த அரசியல் விஜய்க்கு புரிந்துவிடும்: பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன்
தேர்தலை சந்தித்ததும் யதார்த்த அரசியல் விஜய்க்கு புரிந்துவிடும்: பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன்
ADDED : ஏப் 16, 2025 11:43 PM

மதுரை: 'முதல் தேர்தலை சந்தித்த பிறகு த.வெ.க., தலைவர் விஜய், தமிழகத்தின் யதார்த்த அரசியலை புரிந்து கொள்வார்' என மதுரையில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.
அவர் கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை வழக்கில் சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், நேஷனல் ஹெரால்டு சொத்தை தங்களுடையதாக்கி உள்ளனர்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு இருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த வழக்கு 2012ல் பாட்டியாலா நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. எனவே நேஷனல் ஹெரால்டு வழக்குக்கும், பா.ஜ.,வுக்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழக பா.ஜ.,வின் மையக்குழு கூடி, மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை ஒருமனதாக தேர்வு செய்தோம். மாநிலத் தலைவராக வேறு ஒருவர் போட்டியிடக் கூடாது என யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை.
தி.மு.க.,வை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் நயினார் நாகேந்திரனும், அண்ணாமலையும் செயல்படுகின்றனர். கூட்டணியில் இல்லாத போது பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., நட்புடன் இருந்துள்ளது.
வரும் நாட்களில் தி.மு.க.,வில் இருந்து சில கட்சிகள் வெளியே வர வாய்ப்புள்ளது. அப்படி வெளியே வரக்கூடிய கட்சிகள் பா.ஜ., கூட்டணிக்கு வருவார்கள்.
த.வெ.க., தலைவர் விஜயின் அரசியல் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள சிறுபான்மை வாக்குகளை விஜய் பிரித்துவிடுவார். அவர் அ.தி.மு.க., கூட்டணியின் வாக்குகளை பிரிக்க வாய்ப்பில்லை. விஜய் 2026ல் முதல் தேர்தலை சந்தித்த பிறகு தமிழகத்தின் யதார்த்த அரசியலை புரிந்து கொள்வார் என்றார்.