ADDED : அக் 13, 2024 11:54 PM

விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, வாகனங்கள் நிறுத்துவதற்காக, கூடுதலாக 25 ஏக்கர் இடம் ஏற்பாடு செய்யுமாறு போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதால், அக்கட்சி நிர்வாகிகளுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும், போலீஸ் அறிவுரையை ஏற்று மாநாட்டுக்காக கூடுதல் இடம் தேடும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்காக விழுப்புரம் - திண்டிவனம் சாலையில் 85 ஏக்கர் பரப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரமாண்டமான மாநாடு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக, சாலையின் எதிர்புறத்தில் 30 ஏக்கர் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக போலீசாரிடம், த.வெ.க., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாநாடு நடைபெறும் இடம், மாநாட்டுக்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடம் உள்ளிட்டவற்றை வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., அஸ்ரா கர்க், டி.ஐ.ஜி., திஷா மிட்டல், எஸ்.பி., தீபக் சிவாச் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இரண்டு நாட்களுக்கு முன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நேற்று முன்தினம் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் ஆகியோரும், மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். பொதுமக்களின் பயணத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு, வாகன நெரிசலைத் தவிர்க்க அப்போது அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
திட்டமிடுவதைக் காட்டிலும் கூடுதலாக கட்சி தொண்டர்கள் வாகனங்களில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என, கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதுபோன்ற நிலைமையை சமாளிப்பதற்கு, கூடுதலாக 25 ஏக்கர் இடத்தை வாகன நிறுத்துமிடத்திற்காக ஏற்பாடு செய்யுமாறு, போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
இதையடுத்து, வி.சாலையில் மாநாடு நடைபெறும் இடத்தையொட்டி, 25 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரை காலி இடத்தை த.வெ.க., நிர்வாகிகள் தேடி வருகின்றனர். மேலும், சாலையோரம் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் எந்த பகுதியில் இடம் கிடைத்தாலும் பரவாயில்லை என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.