விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலையில் விதிமீறலால் தொடரும் உயிரிழப்புகள்
விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலையில் விதிமீறலால் தொடரும் உயிரிழப்புகள்
ADDED : ஜன 14, 2025 11:48 PM

விழுப்புரம்-புதுச்சேரி நான்கு வழிச்சாலையில் விதிகளை மதிக்காமல் எதிர் திசையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளால் விபத்தும், உயிர் பலியும் தொடர்கிறது.
விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை பணி முடிந்து, தற்காலிகமாக வாகன போக்குவரத்து துவங்கி உள்ளது. இதில் பிரதான கிராமங்கள் சந்திப்புகளில் சர்வீஸ் சாலைகள் போடப்பட்டுள்ளன. அதனை உள்ளூர் மக்கள் முறையாக பயன்படுத்தாமல், விதிமீறி செல்வதால் விபத்துகள் தொடர்கிறது.
விபத்துகளை தடுக்கவே நான்கு வழிச்சாலையில் சென்டர் மீடியன் அமைத்து, இரு மார்க்கங்களுக்கும் தனித்தனி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகன ஓட்டிகள் ஒரே சாலையில் எதிரெதிராக வருவதால் விபத்துகள் நடக்கிறது.
குறிப்பாக, மதகடிப்பட்டு மற்றும் சுற்று வட்டார வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலையை முறையாக பயன்படுத்தாமல், விதியை மீறி எதிர் திசையில் செல்வதால் விபத்துகள் நடைபெறுகிறது.
கெங்கராம்பாளையம் டோல்பிளாசா அருகில் உள்ள டைல்ஸ் ஷோரூம் எதிரில் விடப்பட்டுள்ள இடைவெளி வழியாக திடீரென திரும்பிய பஸ் மீது கார் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 11ம் தேதி இரவு மதகடிப்பட்டு சந்தையில் இருந்து புதுச்சேரி- விழுப்புரம் (தெற்கு மார்க்கம்) செல்ல வேண்டிய கார், விழுப்புரம் - புதுச்சேரி (வடக்கு மார்க்க) சாலையில் விதிமீறி எதிர் திசையில் சென்று, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்திற்கு முக்கிய காரணம், டைல்ஸ் ஷோரூம் எதிரில் விடப்பட்டுள்ள இடைவெளியே. சர்வீஸ் சாலையில் சுற்றிச் செல்வதை தவிர்த்து, இந்த இடைவெளியை பயன்படுத்தி, எளிதாக சாலையை கடந்து செல்வதற்காக, மேம்பாலத்தில் எதிர்திசையில் வந்தால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இதே போல், திருவண்டார்கோவில், திருபுவனை, எம்.என்.குப்பம் ஆகிய இடங்களிலும் சர்வ சாதாரணமாக எதிர் திசையில் இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை செல்கின்றன.
இந்த நான்கு வழிச்சாலையில், கெங்கராம்பாளையம் சந்திப்பு முதல் எம்.என்.குப்பம் சந்திப்பு வரை, எந்த வாகனம், எந்த திசையில் வரும் என கணிக்க முடியாத, ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். சர்வீஸ் சாலையில் இருந்து திடீரென நான்குவழிச் சாலையில் புகுந்து மாறி, மாறி செல்வது தொடர்கிறது.
நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் 80 கி.மீ., வேகத்தில் பயணிக்கலாம் என்பதால், வாகன ஓட்டிகள் வேகமாக வருகின்றனர். ஆனால், அந்தந்த பகுதி உள்ளூர் வாகன ஓட்டிகள், ஆபத்தை உணராமல் விதிகளை மீறி, கண்டபடி வாகனங்களை இயக்குவதால் விபத்து நடக்கிறது.எனவே, விதிமீறலால் ஏற்படும் விபத்துகளை தடுக்க 'நகாய்' நிர்வாகம், நான்கு வழிச்சாலையில் உள்ள தேவையற்ற இடைவெளிகளை மூடி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
- நமது நிருபர் -