நோட்டாவுக்கு கூட ஓட்டு போடுங்க; திமுகவுக்கு மட்டும் வேண்டாம்!
நோட்டாவுக்கு கூட ஓட்டு போடுங்க; திமுகவுக்கு மட்டும் வேண்டாம்!
ADDED : ஏப் 01, 2026 08:12 AM

நமது நிருபர்
தேர்தலில், நோட்டாவுக்கு கூட ஓட்டு போடுங்கள்; ஆனால், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட வேண்டாம் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க.,வை புறக்கணிப்பதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்திருந்தது. தற்போது, தேர்தலில், நோட்டாவுக்கு கூட ஓட்டு போடுங்கள்; ஆனால், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட வேண்டாம் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், எதற்காக தி.மு.க.,வை புறக்கணிக்கிறோம் என்ற காரணங்களை பட்டியலிட்டு, பொதுமக்களிடம் நோட்டீஸ் வினியோகித்து, எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் கூறுகையில், தி.மு.க., அரசு கடந்த தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் ஒரு அடி நிலத்தை கூட எடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், முப்போகம் விளையும், 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரித்ததுடன், தடுக்க முயன்ற விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது.
இனாம் நில விவசாயிகளின் நிலங்களை பூஜ்ஜிய மதிப்பு செய்து அபகரித்தது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கள்ளுக்கான தடையை நீக்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. மாறாக, விவசாயிகளுக்கு எதிராகவே முழுமையாக செயல்பட்டுள்ளது.
எனவே, மேற்கூறிய காரணங்களை பட்டியலிட்டு பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வினியோகித்து வருகிறோம். இத்துடன், நோட்டாவுக்கு கூட ஓட்டு போடுங்கள்; ஆனால், எக்காரணம் கொண்டும் தி.மு.க.,வுக்கு ஓட்டு போட வேண்டவே வேண்டாம் என்பதையும் வலியுறுத்தியும் வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
