'ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பானவை': தலைமை தேர்தல் கமிஷனர்
'ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பானவை': தலைமை தேர்தல் கமிஷனர்
UPDATED : ஏப் 13, 2025 02:19 AM
ADDED : ஏப் 13, 2025 01:20 AM

ராம்கர்: ''மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை; சேதப்படுத்த முடியாதவை,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், மூன்று நாள் பயணமாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நேற்று சென்றார். இங்குள்ள மாநில தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று அவர் கலந்துரையாடினார்.
ஜார்க்கண்டில் உள்ள வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின் ராம்கர் மாவட்டத்தில் அவர் கூறியதாவது:
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்றவை என்றும், அவற்றை சேதப்படுத்த முடியும் என்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்; அது உண்மையில்லை. எந்த வித ஆதாரமும் இல்லாமல் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதுாறு பரப்பி வருகின்றன. அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் ஆய்வு செய்யப்பட்ட பின்பே, ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை இணையதளம் வாயிலாகவோ, ப்ளூடூத் எனப்படும் தொழில்நுட்ப முறை வாயிலாகவோ இணைக்க முடியாது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஓட்டுப் பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த முடியாது. மிகவும் பாதுகாப்பான வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், முறைகேடும் செய்ய முடியாது. எனவே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது.
இவ்வாறு அவர் கூறினார்.