வக்பு மசோதா கருத்து கேட்பு சுற்றுப்பயணம் புறக்கணிப்பு!: ஜே.பி.சி., எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தடாலடி
வக்பு மசோதா கருத்து கேட்பு சுற்றுப்பயணம் புறக்கணிப்பு!: ஜே.பி.சி., எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தடாலடி
ADDED : நவ 09, 2024 01:05 AM

'பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் தலைவர் தன் இஷ்டம்போல செயல்படுவதை கண்டித்து, நாடு முழுதும் இன்று துவங்கவுள்ள கருத்துக் கேட்பு சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கிறோம்' என, வக்பு மசோதாவை ஆய்வு செய்து வரும் கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அறிவித்துள்ளனர்.
வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்கு முறை செய்யும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவை ஜே.பி.சி., எனப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது.
இதுவரையில், 25க்கும் மேற்பட்ட தடவை கூடி பல்வேறு தரப்பினரையும் வரவழைத்து இக்குழு கருத்துக் கேட்டுள்ளது.
குழுவின் தலைவரும், பா.ஜ., மூத்த எம்.பி.,யுமான ஜெகதாம்கா பால், தன் இஷ்டம் போல செயல்படுவதாகவும், தங்களை எந்த வகையிலும் கலந்தாலோசிப்பதில்லை என்றும், குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சபாநாயகரிடம் புகார்
இதுகுறித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இக்குழுவில் இடம்பெற்றுள்ள பா.ஜ., - எம்.பி.,யான தேஜஸ்வி சூர்யா, தன் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு, ஜெகதாம்பிகா பாலை அழைத்துச் சென்றார். ஹுப்ளி மாவட்ட விவசாயிகளைச் சந்தித்த அவர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
அந்த விவசாயிகள், தங்கள் நிலங்களை வக்பு வாரியம் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறி முறையீடு செய்தனர்.
கூட்டுக்குழு திட்டம்
அதை பதிவு செய்து கொண்ட ஜெகதாம்பிகா பால், இந்த விபரங்கள் பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சேர்க்கப்படும் என, கூறினார்.
இந்நிலையில்தான், மேலும் பல்வேறு தரப்புக்களின் கருத்துகளை கேட்டறிவதற்காக குவஹாத்தி, புவனேஸ்வர், கோல்கட்டா, பாட்னா, லக்னோ ஆகிய ஐந்து நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒன்பது மாநிலங்களின் வக்பு வாரிய நிர்வாகிகளை சந்தித்துப் பேச, கூட்டுக்குழு திட்டமிட்டிருந்தது.
இன்று முதல், வரும் 14ம் தேதி வரை இந்த குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும், இந்த சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
- நமது டில்லி நிருபர் -