அறிவாலயத்தில் 'வார் ரூம்' திறப்பு; 12 நாளில் 77.34 லட்சம் பேர் சேர்ப்பு
அறிவாலயத்தில் 'வார் ரூம்' திறப்பு; 12 நாளில் 77.34 லட்சம் பேர் சேர்ப்பு
ADDED : ஜூலை 13, 2025 02:05 AM

சென்னை: 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார இயக்கத்தின் வாயிலாக கடந்த 12 நாட்களில், 77 லட்சத்து 34,937 பேர், தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும், அவர்களில், 49 லட்சத்து, 11,090 பேர் புதிதாக சேர்ந்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் 2026 சட்டசபை தேர்தல் பணிகளை துவங்கியுள்ள ஆளும் தி.மு.க., கடந்த 1ம் தேதி முதல், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை நடத்தி வருகிறது.
தி.மு.க., தலைவர் முதல் கிளைத்தலைவர் வரை அனைத்து நிர்வாகிகளும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் வீடு வீடாகச் சென்று, உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.
'மத்திய பா.ஜ., அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது' என, பிரசாரமும் செய்து வருகின்றனர். இந்த பிரசார, உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை கண்காணிக்க, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு, 'அரசு திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கின்றன.
அதேசமயம் அ.தி.மு.க., -- பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது கூட்டணியல்ல; தமிழகத்தையும், தமிழகத்தின் ஒற்றுமையையும் சிதைத்து, மீண்டும் நுாறாண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்' என, மக்கள் தெளிவாக சொல்கின்றனர்.
விறுவிறுவென நடந்து வரும், 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார இயக்கத்தின் வாயிலாக, இதுவரை 77 லட்சத்து 34,937 பேர், தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
அவர்களில், 49 லட்சத்து 11,090 பேர் புதிய உறுப்பினர்கள். தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, அவர்கள் தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.