நகை தொழில் மீது கண்காணிப்பு தேவை; இந்தியாவை உஷார்படுத்தும் எப்.ஏ.டி.எப்.,
நகை தொழில் மீது கண்காணிப்பு தேவை; இந்தியாவை உஷார்படுத்தும் எப்.ஏ.டி.எப்.,
UPDATED : செப் 21, 2024 02:06 AM
ADDED : செப் 20, 2024 11:27 PM

புதுடில்லி: இந்திய நவரத்தினங்கள் மற்றும் நகை துறையில் நடைபெறும் அதிக தொகை பரிவர்த்தனைகள், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான கருவியாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக, பிரான்சை தலைமையிடமாக கொண்ட நிதி பரிமாற்ற கண்காணிப்பு அமைப்பான எப்.ஏ.டி.எப்., எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை வர்த்தகம் வளர்ச்சி கண்டிருப்பதற்கு ஏற்ப, அவற்றின் கடத்தல் மற்றும் கருப்பு பண பரிவர்த்தனையும் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கண்காணிப்பு
இந்த துறையில், கிட்டத்தட்ட 1.75 லட்சம் வினியோகஸ்தர்கள் இந்தியாவில் உள்ள நிலையில், நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதி அபிவிருத்தி கவுன்சிலில், வெறும் 9,500 உறுப்பினர்களே பதிவு செய்திருக்கின்றனர்.
அதிக தொகைக்கு வர்த்தகம் நடைபெறும் நகைத் தொழிலில், சட்டவிரோத பணப் பரிமாற்றம், கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களை கண்காணிப்பதில், குறைபாடு நிலவுகிறது. நவரத்தினங்கள், நகைகளின் கடத்தல், கணக்கில் வராத இடப்பெயர்வுகள் மற்றும் அதன் வாயிலாக நடைபெறும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் சிறிய அளவில் இருப்பினும் தடுப்பதில் இந்தியா தீவிரம் காட்ட வேண்டும்.
சட்டவிரோதம்
இறக்குமதி, ஏற்றுமதி, உள்நாட்டு இருப்பு, பரிமாற்றம் ஆகியவை குறித்த புள்ளிவிபரத்தை அரசு மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்க, நகைத் தொழிலின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.