செயற்பொறியாளர்கள் பதவி உயர்வுக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் நீர்வள துறையினர்
செயற்பொறியாளர்கள் பதவி உயர்வுக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் நீர்வள துறையினர்
ADDED : மார் 24, 2025 05:23 AM

தமிழக அரசின் பொதுப்பணித்துறை, 2021ம் ஆண்டு வரை ஒரே துறையாக செயல்பட்டு வந்தது. கடந்த 1997 - 99ம் ஆண்டுகளில் ஏற்பட்ட காலி பணியிடங்களை, ஒருங்கிணைந்த பொறியியல் பணித்தொகுப்பின் கீழ் நிரப்ப அரசு முடிவு செய்தது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு நடத்தபட்டது. தேர்ச்சி பெற்ற 210 பேரை, வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டப்படி, உதவி பொறியாளர்களாக தமிழக அரசு நியமனம் செய்தது.
இரண்டாக பிரிப்பு
தமிழக அரசு, 2021ல் பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத்துறை என இரு துறையாக பிரித்தது. இவற்றில், எந்த துறையில் பணியாற்ற வேண்டும் என, பணி நியமனம் செய்தவர்களிடம் விருப்ப கடிதம் பெறப்பட்டது. இதன்படி, 1999ம் ஆண்டு சேர்ந்தவர்களில், 52 பேர் பொதுப்பணித் துறையிலும், 158 பேர் நீர்வளத் துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.
உதவி செயற்பொறியாளராக உள்ளவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது விதி. ஒன்றாக பணியில் சேர்ந்து, விருப்ப கடிதம் கொடுத்து, பொதுப்பணித் துறையில் சேர்ந்த 52 பேரும், செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்று விட்டனர்.
ஆனால், நீர்வளத் துறையில் பணியில் சேர்ந்த 158 பேரில், 76 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 82 பேர் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். இதனால், நீர்வளத் துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த பொறியாளர்களில் சிலர், பொதுப்பணித் துறையில் பணியாற்ற மறுவாய்ப்பு வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கு ஓராண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. இதைக் காரணம் காட்டி, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமலே உள்ளது. அவர்களில் சிலர் வயது மூப்பின் காரணமாக, பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்று வருகின்றனர். தற்போது, நீர்வளத் துறையில் 49 செயற்பொறியாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மன உளைச்சல்
இந்த பணியிடங்களில், 2007ல் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்தவர்கள், செயற்பொறியாளராக பதவி உயர்வு பெறும் நிலையில் உள்ளனர். தகுதி இருந்தும் பதவி உயர்வு கிடைக்காமல், நீர்வளத் துறையில் பணியாற்றும் 82 உதவி செயற்பொறியாளர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
பொதுப்பணித் துறையை போன்றே நீர்வளத் துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றுவோருக்கு, செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் ஏக்கமாக உள்ளது.
சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நீர்வளத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, இந்த கேள்விக்கு விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் நீர்வளத் துறையினர் உள்ளனர்.
- நமது நிருபர் -