'காலில் விழுகிறோம்; ஒன்றிணையுங்கள்' பழனிசாமிக்கு பன்னீர் தரப்பு வேண்டுகோள்
'காலில் விழுகிறோம்; ஒன்றிணையுங்கள்' பழனிசாமிக்கு பன்னீர் தரப்பு வேண்டுகோள்
UPDATED : ஜூலை 21, 2025 03:34 AM
ADDED : ஜூலை 21, 2025 03:32 AM

காஞ்சிபுரம் : முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நடத்தும் அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழுவின், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
அதில் கலந்து கொண்டு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:
அ.தி.மு.க., ஒன்று சேர வேண்டும் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உள்ளது. ஒன்றுபட்டால் தான் எல்லோருக்கும் உண்டு வாழ்வு. அதில்லையேல், மொத்தமாக அழிவுதான்.
கட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஏற்படுத்திய சட்ட விதிகள் அனைவரும் அறிந்ததுதான். கடைக்கோடி தொண்டனுக்கும் பொதுச்செயலர் ஆகும் தகுதி உள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இணைந்து பொதுச்செயலரை தேர்வு செய்யக்கூடாது; கட்சியின் அனைத்து தொண்டர்களும் ஓட்டுப்போட்டு பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை எம்.ஜி.ஆர்., ஏற்படுத்தினார்.
பத்து மாவட்டச் செயலர்கள் முன் மொழிந்தால், பொதுக்குழு வாயிலாக பொதுச்செயலரை தேர்வு செய்து கொள்ளலாம் என, பழனிசாமி தனக்கு ஏற்ப, விதியை மாற்றிக் கொண்டு விட்டார்.
கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஏற்படுத்திய விதியை மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது. சட்ட விதிகளை பழனிசாமி மதித்து நடக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் ரஞ்சித் குமார் பேசுகையில், ''நாங்கள் எவ்வளவோ போராடி விட்டோம். எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். இனி, உங்கள் காலில் தான் விழ வேண்டும் என்றால், அதையும் செய்கிறோம். எங்களையும் சேர்த்துகொண்டு, கட்சியை ஒன்றிணைக்க வேண்டும்.
இதை பழனிசாமி செய்யவில்லை என்றால், வரும் 2026லும் மூன்று எழுத்து கட்சி தான் ஆட்சி அமைக்கும்,'' என்றார்.