உங்களில் ஒருவன்: தி.மு.க.,வால் உருவான 4 பிரச்னைகள் அகற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு!
உங்களில் ஒருவன்: தி.மு.க.,வால் உருவான 4 பிரச்னைகள் அகற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு!
UPDATED : பிப் 10, 2024 06:55 AM
ADDED : பிப் 10, 2024 12:15 AM

தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக திகழும் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி; விரைவாக வளர்ந்து, சென்னைக்கு உள்ளே வந்து கொண்டிருக்கும் பகுதி திருவள்ளூர்; சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை என்று சமய புரட்சிகள் செய்த ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதுார். இந்த மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும் பாதயாத்திரை வழக்கம்போல் பெரு கொண்டாட்டத்துடன் நடந்தேறியது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த மண். யார் யாரோ பெயரில், மக்களின் வரிப் பணத்தில் பெயர் வைப்பதும், கட்டடம் கட்டுவதுமாக இருக்கும் தமிழக அரசியல் கட்சிகள், ஆசிரியர்களின் பெருமையை உயர்த்திய, நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை விடுக்கவில்லை. இதை, தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும் செய்து கொடுப்போம்.
வேண்டும் மீண்டும் மோடி
தேச நலனை, நாட்டின் நல்ல எதிர்காலத்தை, இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டை விரும்பும் நல்ல மனிதர்கள், பா.ஜ.,வில் தொடர்ச்சியாக இணைந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. 'வேண்டும் மீண்டும் மோடி' என்ற வாக்கியம், மக்களின் மனதில் பதிந்துள்ளது.
காமராஜர் குறித்து பொய் சொல்லித் தோற்கடித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்த 1967லிருந்தே, உருவான நான்கு பிரச்னைகள், இன்று வரை மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கின்றன.
தி.மு.க.,வின் லஞ்ச ஊழல், குடும்ப ஆட்சி, ஜாதி அரசியல், அரசியல் அடாவடித்தனப் போக்கு... இவை நான்கையும், அரசியலில் இருந்து அகற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அது கடமை. அதற்கான நேரம் இது. இவற்றை அகற்ற, பிரதமர் மோடி மூன்றாவது முறையாகவும் ஆட்சிக்கு வந்தாக வேண்டும்.
ஊழல் நாடு பரிகாசம்
முதல் முறை பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில், நம் பிரதமர், லஞ்சத்திற்கு எதிரான ஆட்சி செய்து, ஊழலை அடியோடு கட்டுப்படுத்தினார். இரண்டாவது முறை பொறுபேற்று, உலக அளவில் வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்யும் நாடாக மேம்படுத்தியுள்ளார்.
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள், அடுத்த தலைமுறைக்கான ஆட்சி. காங்கிரஸ்,- தி.மு.க., கூட்டணி, 2004 - 2014 பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தபோது, அனைத்து துறைகளிலும் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து, இந்தியாவை ஊழல் நாடு என, உலகம் முழுக்க பரிகாசம் செய்ய வைத்தது.
திருவள்ளூர் எம்.எல்.ஏ., - வி.ஜி.ராஜேந்திரன், பாண்டூரில் நடத்தி வரும் மருத்துவக் கல்லுாரிக்காக, கடந்த 2023 ஆகஸ்ட்டில், 'நீட்' தேர்வை ஒழிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்.
எட்டிப்பார்க்கவில்லை
கடந்த 2023ல் திருவள்ளூர் மாவட்டத்தில், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 92. கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட தி.மு.க.,வினருக்கு கல்வியைப் பற்றி பேச, எந்த தகுதியும் கிடையாது.
திருவள்ளூர் எம்.பி., ஜெயகுமார், 2019ல் வெற்றி பெற்ற கையோடு சென்றவர்தான். தொகுதி பக்கம் மருந்துக்கும் எட்டிப் பார்க்கவில்லை.
தற்போது திடீரென வந்து, 'ராமர் கோவிலை ஏன் அதானி திறந்து வைத்தார்?' என்று குழம்பிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் யார் அதிகமாக உளறுகின்றனர் என்ற போட்டி நடக்கிறது.
யாருடைய பணம்?
ஸ்டாலின், பகுதி நேர முதல்வராக உள்ளார். இதுவரை மூன்று முறை முதலீடு என்ற பெயரில், வெளிநாடு சென்றவர். 2022ல் துபாய் சென்று வந்தார்.
பின், 6,100 கோடி ரூபாய் முதலீடு வரும் என்று சொன்னார். இரண்டு ஆண்டுகள் கடந்தும், இன்னும் ஒரு ரூபாய் கூட வரவில்லை.
துபாய் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறது என சொன்னார்.
அந்த நிறுவனமும், உதயநிதி அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் இயங்கி வருகிறது என்பதைக் கண்டறிந்து, துபாயிலிருந்து வரப் போவது யாருடைய பணம் என்ற கேள்வியை எழுப்பியதும், அந்த முதலீட்டை மறந்து விட்டனர்.
ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளுக்குச் சென்று, வெறுங்கையுடன் திரும்பி வரும் முதல்வர், முதலீடு ஈர்க்கத்தான் செல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய நிறுவனங்கள், அந்த நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களுக்கு ஸ்பெயினுக்கு சென்று கையெழுத்திட்ட முதல்வர், இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஸ்டாலின்தான்.
பயணம் தொடரும்...