மூன்றாவது மொழி அறிந்ததால் உயர்ந்தோம்! கோவை தொழில்முனைவோர் 'நச்' பேட்டி
மூன்றாவது மொழி அறிந்ததால் உயர்ந்தோம்! கோவை தொழில்முனைவோர் 'நச்' பேட்டி
ADDED : பிப் 21, 2025 04:59 AM

கோவை : தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவதாக நம் நாட்டில் புழக்கத்திலுள்ள, ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொண்டால், வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் சாதிக்கலாம் என்று, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அடித்து பேசுகின்றனர்.
தமிழ், ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளோ அல்லது வடமாநில மொழியான ஹிந்தி, பீகாரி, குஜராத்தி, ராஜஸ்தானி உள்ளிட்ட ஏதாவது ஒரு மொழியை கற்கலாம். இது, நாட்டின் எந்த இடங்களுக்கு கல்வி, தொழில், சுற்றுலா நிமித்தமாக செல்லும்போதும் கைகொடுக்கும்.
கோவையிலுள்ள பெரும்பாலான வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என்கின்றனர். ஹிந்தி தெரியாத பலர், தற்போது பயிற்சியாளர் நியமித்து கற்று வருவதாக கூறுகின்றனர்.
வரப்பிரசாதம்
வனிதா மோகன், நிர்வாக அறங்காவலர், சிறுதுளி அமைப்பு:
மொழி என்பது ஒரு குழந்தையை போன்றது. அந்த மொழியை நாம் கொண்டாட வேண்டும். ஒரு மொழி அல்ல, பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். கல்வி கற்பதற்கும், தொழில் முன்னேற்றத்திற்காகவும் உலகம் முழுக்க, எங்கு பயணித்தாலும் முதலிடத்தில் நிற்பது மொழி. அதை கற்றுக்கொண்டால் எதிரே பேசுபவருடன், நமக்கு நல்ல புரிதல் ஏற்படும். நம் எண்ணங்களை தெளிவாக விளக்கலாம். தொழில்துறையினருக்கு 'எக்ஸ்டிரா' மொழி ஒரு வரப்பிரசாதம்.
சுந்தரராமன், தலைவர், சைமா (தென்னிந்திய மில்கள் சங்கம்):
நம் தேசம் பல்வேறு மதம், இனம், மொழி, கலாசாரம், பண்பாடுகளை கடந்து சிறந்து விளங்குகிறது. மொழிகள் கலாசாரத்துக்கான பாலம். மொழிகளின் தேவையை, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். நமக்கு எந்த மொழி தேவையோ, அதை நாம் கற்பதில் தவறில்லை. குறிப்பிட்ட மொழியை படியுங்கள், பேசுங்கள் என்று கட்டாயப்படுத்தவோ, நிபந்தனை விதிக்கவோ கூடாது. எவ்வளவு கூடுதல் மொழியறிவு இருக்கிறதோ, அந்தளவு நல்ல வளர்ச்சியை எட்டுவோம்.
மொழியை வளர்க்க வேண்டும்
ஜெகதீஷ் சந்திரன், செயலாளர், சிஸ்பா (தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கம்):
தொழில்முனைவோர் ஒவ்வொருவரும், மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்வது அவசியம். பஞ்சு மற்றும் நுால் வர்த்தகத்துக்கு, ஹிந்தி மொழி மிக மிக அவசியம். வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவதிலிருந்து, பெரிய தொழிலதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது வரை, நமக்கு ஹிந்திமொழி தெரிந்திருப்பது முக்கியம்.
கார்த்திகேயன், தலைவர், கொடிசியா:
மூன்றாவது மொழி என்பது, இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று. கேரளாவுக்கோ, ஓசூரை அடுத்த பெங்களூருவுக்கோ சென்றோமென்றால் மலையாளமோ, கன்னடமோ கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஹிந்தி தெரிந்திருந்தால் பேசி சமாளிக்கலாம்.
தொழில் ரீதியாக, மூன்றாவதாக ஒரு மொழி நமக்கு கட்டாயம் தேவை. அது ஹிந்தியாக இருந்தால் நல்லது. அடுத்த சந்ததிக்கு வழிகாட்டியாக இருக்கும். மொழியை நாம் வெறுப்பதை தவிர்க்க வேண்டும். மொழியை வளர்க்க வேண்டும்.
அவசியம்
சிவக்குமார், தலைவர், காட்மா (கோயமுத்துார், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கம்):
சிறு, குறு தொழில் கூடங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும், ஹிந்தி பேசுபவர்கள். ஹிந்தி தெரியாததால், அவர்களிடம் எங்களால் நேரடியாக பேச முடியாது. சூப்பர்வைசரிடம் சொல்லியே தகவல் பரிமாறுகிறோம். வடமாநிலங்களுக்கு தொழில்ரீதியாக பயணம் மேற்கொள்ளும் போது, ஹிந்தி தெரியாமல் தடுமாறுகிறோம். அவர்கள் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், ஹிந்தியில்தான் பேசுவார்கள். மொழி தெரியாமல் வர்த்தகம் செய்வது சிரமம். அதனால் பயிற்சியாளர் நியமித்து, ஹிந்தி பேச கற்று வருகிறோம்.
சுருளிவேல், துணை தலைவர், டான்ஸ்டியா (தமிழ்நாடு சிறுகுறு தொழில்கள் சங்கம்):
ஹிந்தி மொழியை கட்டாயம், ஒவ்வொரு தொழில் முனைவோரும் கற்க வேண்டும். இன்றைய தொழிற்கூடங்களில் ஹிந்திமொழி பேசும் தொழிலாளர்கள் அதிகம். அவர்களை நிர்வகிக்கவும், வேலை வாங்கி உற்பத்தியை பெருக்கவும், ஹிந்தி மொழி அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
மிகுந்த பயன்
அருள்மொழி, தலைவர், ஓஸ்மா, (ஓப்பன் எண்ட் மில் சங்கம்):
டில்லியில் பாரத் டெக்ஸ்ட் கண்காட்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் ஹிந்தி தெரிந்திருந்தது. அனைவருடனும் பேசினர். ஆனால் தமிழகத்திலிருந்து சென்ற பலரும், ஹிந்தி தெரியாமல் சிரமப்பட்டனர். தற்போதைய சூழலுக்கு, ஹிந்தியை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகி விட்டது.
கிருத்திகா, துணைத்தலைவர், கோவை மாவட்ட கம்ப்ரசர் அசோசியேஷன்:
மும்மொழிக்கொள்கை ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம்; அது நம் விருப்பம். மூலப்பொருட்களுக்கு வடமாநிலங்களை நம்பியே இருக்கிறோம். உற்பத்தி செய்த உபகரணங்களையும், விற்பனைக்கு அங்குதான் அனுப்பி வைக்கிறோம்.
வர்த்தக ரீதியாக, அடிக்கடி நாம் தொடர்பில் இருக்கிறோம். அதனால் ஹிந்தி கற்று வருகிறோம். வடமாநிலங்களில் நடக்கும் தொழிற்கண்காட்சியில் பங்கேற்கும் போதும், பயணத்தின் போதும், கற்ற அரைகுறை ஹிந்தி எங்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.