2006 போல் தொகுதி தேர்வு வேணும்: காங்கிரஸ் 'டிமாண்ட்!'
2006 போல் தொகுதி தேர்வு வேணும்: காங்கிரஸ் 'டிமாண்ட்!'
ADDED : நவ 06, 2025 06:05 AM

'காங்கிரஸ் அடையாளம் காண வேண்டிய 125 தொகுதிகளை, கட்சியின் பொற்காலமாக இருந்த 2006 சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி தேர்வு செய்யுங்கள்' என, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், தமிழக காங்., செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.
தேர்தல் வியூகம் தொடர்பாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்., ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், விஷ்ணுபிரசாத் பேசியது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் 48 தொகுதிகளில் போட்டியிட்டு, 34ல் வென்றது. அப்போது, காங்., வாங்கிய ஓட்டு சதவீதம் அதிகம். காங்கிரசுக்கு பொற்காலமாக நடந்த தேர்தல் அது.
கடந்த 2006 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் வாங்கிய தொகுதிகளை அளவுகோலாக வைத்து, இடங்களை பெற்றால், வாங்குகிற தொகுதிகளில் வெ ற்றி பெறலாம்.
எனவே, 125 தொகுதிகளை அடையாளம் காணும் பட்டியலில், கடந்த 2011, 2014, 2016 ஆகிய தேர்தல்களை அளவுகோலாக வைத்து, தேர்வு செய்யும் முடிவை எடுக்க வேண்டாம். ஏனென்றால், அந்த தேர்தல்களில் காங்.,குக்கு பெரிய அளவில் வெற்றி கிட்டவில்லை.
தி.மு.க.,வுடன் சட்டசபை தேர்தலுக்கான ஒப்பந்தம் போடும்போது, உள்ளாட்சி தேர்தல் பங்கீடு சதவீதம், அறங்காவலர் பதவி, வாரியத் தலைவர் பதவிகளுக்கும் சேர்த்து ஒப்பந்தம் போட வேண்டும். அது கடைக்கோடி தொண்டர்களையும் மகிழ்ச்சியடைய வைக்கும்.
பள்ளம் தோண்டி விதை போட்டதும், அதற்கு தான் உரம் போட வேண்டும். விதை இல்லாத மண்ணிற்கு உரம் போடக்கூடாது. அதேபோல், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு விஷ்ணுபிரசாத் பேசிய பின், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசுகையில், “விஷ்ணு பிரசாத்தின் கருத்தை, டில்லி மேலிடத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்,” என உறுதியளித்தார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

