'தேர்தல் வரை எங்களை மாற்றக்கூடாது': மாவட்ட காங்., தலைவர்கள் போர்க்கொடி
'தேர்தல் வரை எங்களை மாற்றக்கூடாது': மாவட்ட காங்., தலைவர்கள் போர்க்கொடி
ADDED : அக் 31, 2025 12:46 AM

'சட்டசபை தேர்தல் வரை, மாவட்டத் தலைவர்களை மாற்றக்கூடாது' என, டில்லி மேலிடத்திற்கு, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன், ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில், கட்சி உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் முன்மொழியப்பட்டன.
மேலும், மாவட்டத் தலைவர் பதவிக்கு, ஐந்து ஆண்டுகள் காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழக காங்கிரசில் ஐந்தாண்டுக்கு மேலாக நீடிக்கிற மாவட்டத் தலைவர்களை மாற்றும் பணி துவங்கியது.
கட்சி ரீதியாக, 78 மாவட்டங்கள் உள்ளன. இதில் தென் சென்னை, மத்திய சென்னை, திருநெல்வேலி, காஞ்சிபுரம் உட்பட, 13 மாவட்டங்களுக்கு தலைவர்கள் இல்லை; பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலில் கட்சி பணிகள் நடக்கின்றன.
முறையீடு கிராம, நகர கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள், இந்த 13 மாவட்டங்களில் சரிவர நடக்கவில்லை. எனவே, காலியாக உள்ள 13 மாவட்டங்களுக்கு, புதிய தலைவர்களை தேர்வு செய்ய, டில்லியிலிருந்து மேலிட குழு வந்தது. மாவட்ட வாரியாக நான்கு பேர் பட்டியல் தயாரித்துள்ளது.
அவர்களிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் புதிய தலைவர் பட்டியலை, டில்லி மேலிடம் வெளியிடாமல் இருப்பதால், 13 மாவட்டங்களில் கட்சி பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், 'எங்களை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டாம்' என, திருநாவுக்கரசர், அழகிரி, மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள், டில்லி தலைவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
செல்வப்பெருந்தகை மாநில தலைவரானதும், கோவை மாவட்டத் தலைவர்கள் மட்டும் மாற்றப்பட்டனர். மற்ற மாவட்டங்களுக்கான பட்டியல் தயாராக உள்ளது.
வலியுறுத்தல் எந்த நேரமும் பட்டியல் வெளியாகலாம் என்ற நிலையில், மாவட்டத் தலைவர்கள் சிலர், 'சட்டசபை தேர்தல் வரை தங்களை மாற்றக் கூடாது' என்றும்,  'பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
அதற்கு, கோஷ்டி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதனால், புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் இப்போது இருக்காது என தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

