கொள்கை ரீதியாக தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம்: வி.சி.க., - கம்யூ-., கட்சிகள் அறிக்கை
கொள்கை ரீதியாக தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம்: வி.சி.க., - கம்யூ-., கட்சிகள் அறிக்கை
UPDATED : மே 10, 2026 02:53 AM
ADDED : மே 10, 2026 02:36 AM

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சிகளுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளை பலரும் கூறினர்.
கூட்டணி கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும், அதை மதித்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதே, என் எண்ணமாக இருந்தது.
எங்கள் கூட்டணியை சார்ந்த நண்பர்கள், 'இன்றைய நெருக்கடியான சிக்கலை தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம்' என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
அதே நேரத்தில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நன்றி தெரிவிக்க, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க., உடனான உறவை அக்கட்சி முறித்துக் கொண்டது.
ஆனால், 'தமிழக உரிமைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், தொடர்ந்து தி.மு.க.,வுடன் கைகோர்த்து போராடுவோம்' என, கம்யூனிஸ்ட் தலைவர்கள் சண்முகம், வீரபாண்டியன், வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிவித்து, தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது, தி.மு.க., மீது, அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. சோதனை காலத்தில், உறுதியுடன் உடன் நின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
கடந்த ஐந்தாண்டுகளில், அனைத்து துறைகளிலும், தமிழகத்தை வளப்படுத்தி இருக்கிறோம். தி.மு.க., அரசின் திட்டங்களை, புதிய அரசு தொடர வேண்டும் என்பதே என் தனிப்பட்ட விருப்பமாகும்.
இதை கவனத்தில் வைத்து, புதிய அரசு செயல்பட வேண்டும். அமைய இருக்கும் புதிய அரசுக்கு, மீண்டும் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
