ஈ.டி.,க்கும் பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டோம்: உதயநிதி
ஈ.டி.,க்கும் பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டோம்: உதயநிதி
ADDED : மே 24, 2025 11:41 PM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அருணா உள்ளிட்ட 13 துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், எந்த அளவுக்கு நடந்துள்ளது; மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா; விடுபட்டவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறுவது எந்த நிலையில் உள்ளது?' என பல்வேறு கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டு, அவர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார் உதயநிதி.
பணிகளை விரைந்து முடிப்பதற்கும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளை விரைந்து சேர்ப்பதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரையும் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி, பின் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் உள்ளது. மாநில அரசின் நிதி உரிமையை மதிக்காமல் நடந்து கொள்கின்றனர்.
அதனால், நம்முடைய நிதி உரிமையை நிலை நாட்டவும், தமிழகத்துக்கு தேவையான நிதியை உரிமையோடு கேட்டுப் பெறவும், நம்முடைய முதல்வர் டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்துக்கு சென்றார்.
அங்கு, நம்முடைய உரிமையை நிலை நாட்டிப் பேசி உள்ளார். தமிழகத்தின் நலன்களுக்காக ஒரு நாளும் பாடுபடாத தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, தி.மு.க.,வைப் பார்த்து கேள்வி மட்டும் கேட்பார்.
தி.மு.க.,வை யாரும் மிரட்டவும் முடியாது; அடிமையாக்கவும் முடியாது. அமலாக்கத்துறை என சொல்லப்படும் ஈ.டி.,க்கெல்லாம் நாங்கள் ஒரு நாளும் பயப்பட மாட்டோம்; ஏன், பிரதமர் மோடிக்கும் கூட பயப்பட மாட்டோம். தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே தான் இருப்போம்.
ஒரு நாளும் மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் தி.மு.க.,வைச் சேர்ந்தோர் அஞ்ச மாட்டோம். ஏனென்றால், தி.மு.க., என்பது அடிமை கட்சி அல்ல. கருணாநிதி உருவாக்கிய சுய மரியாதை இயக்கம். எங்கள் மீது பொய் வழக்குப் போட்டால், அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.