ADDED : செப் 15, 2026 03:46 AM

சினிமாவை விஞ்சிய 'சேஸிங்'
ஹரியானாவில் குருகிராம் நகரில், பைக்கில் சென்ற பெண்ணை காரில் துரத்திச்சென்று மோதி கீழே விழ வைத்த வீடியோ இணையத்தில் அதிவேகமாக பரவியது. அதிர்ஷ்டவசமாக அந்த பெண், காயங்களுடன் உயிர் தப்பினார்.
சினிமாவை விஞ்சிய அந்த 'சேஸிங்' வீடியோவை பார்த்து பதறிய பலர், அந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்று விசாரித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த பெண், போலீசில் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கார் மோதல் வீடியோ பரவிய நிலையில், அதை ஓட்டிச்சென்ற கல்யாண் பைன்ஸ்லா என்பவர், 'பைக் ஓட்டியவர் பெண் என்று தெரியாது. வேண்டுமென்றே நாங்கள் மோதவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
அதனால் தான் அவர் இளவரசர்!
'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்க, இந்தியா வந்திருந்தார் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் அல் நஹ்யான். டில்லியில் இரண்டு நாள் பயணம் முடிந்ததும் தாயகம் செல்வதற்காக விமானத்தில் ஏறச் சென்றார். வழியனுப்ப வந்தவர்களிடம் விடை பெற்றவர், ஏதோ யோசித்தவராக மீண்டும் திரும்பி வந்தார். சற்று பின் தள்ளி நின்றிருந்த ஒருவரிடம் மட்டும் தனியாக கைகுலுக்கி சில வார்த்தைகள் பேசிவிட்டு மீண்டும் விமானத்துக்கு சென்றார்.
இளவரசருக்கு விடை கொடுத்தவர், டில்லியில் இரண்டு நாள் அவர் இருந்தபோது, கார் ஓட்டிய இந்திய டிரைவர். தான் தாயகம் புறப்படும்போது, தனக்கு கார் ஓட்டிய டிரைவரை மறக்காமல் வந்து நன்றி சொல்லி விடை பெற்ற இளவரசர் வீடியோ, இணையத்தில் 'டிரெண்டிங்' ஆகியுள்ளது.
சிக்கினான் கொள்ளையன்
ராஜஸ்தான், அஜ்மீரில் ஓய்வு பெற்ற டாக்டர் மகேந்திர ஜெயின், மனைவி சுசித்ராவுடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பியபோது, பைக்கில் வந்த இருவர், சுசித்ராவின் செயினை பறிக்க முயற்சித்தனர். இழுபறியில் நிலை தடுமாறி, கொள்ளையர்களும், டாக்டர் தம்பதியும் விழுந்தனர். உடனே கொள்ளையர்களில் ஒருவன், துப்பாக்கியை காட்டி சுசித்ராவின் செயினை பறித்தான். இன்னொரு கொள்ளையன் அதற்குள் பைக்கை நிமிர்த்தி தப்பிக்க தயார் ஆனான்.
சம்பவத்தை கண்டு ஓடோடி வந்த ஒருவர், சமயோசிதமாக செயல்பட்டு பைக்கில் இருந்த கொள்ளையனை பிடித்து கீழே தள்ளினார். தடுமாறிய அவன், தப்பினால் போதும் என்று பைக்கை விட்டு ஓட்டம் பிடித்தான். செயினுடன் நின்ற கொள்ளையனை, ஊர் மக்கள் சுற்றி வளைத்துப்பிடித்தனர். இந்த சம்பவத்தின் 'சிசிடிவி' வீடியோ, வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெங்களூரு வந்தார் பிட்டு
ம.பி., மாநிலம் அஜ்னார் நதியை தனி ஒருவனாக சுத்தம் செய்து, சர்வதேச அளவில் அறிமுகம் பெற்ற மாணவர் பிட்டு தபாஹி, பெங்களூரு துரஹள்ளி வனத்தை, 100 பேருடன் சுத்தம் செய்த வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. பொது இடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இந்த துாய்மைப்பணியை பிட்டு குழுவினர் மேற்கொண்டனர். 'வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று துாய்மைப்பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்' என்று, தான் வெளியிட்ட வீடியோவில் நம்பிக்கையுடன் சொல்கிறார் பிட்டு.
72 வயதினில் வந்த ஆசை
பீஹார் ஜமுய் மாவட்டத்தை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் கபில்தேவ் ராவத், 72, குடும்பத்தினருடன் ஹிமாச்சலுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பலரும், 'பாராகிளைடிங்' செய்து பறப்பதை கண்டதும், தானும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆசை, அவருக்கு துளிர்விட்டது. தகுந்த முன்னேற்பாடுகளுடன், 24 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து பாரா கிளைடிங் செய்தார் ராவத்.
'முதல் நான்கு வினாடிகள் எல்லாம் முடிந்து விட்டது போல அச்சமாக இருந்தது. ஏதேனும் தவறாக நடந்திருந்தால், அவ்வளவுதான்; கதை முடிந்திருக்கு ம். ஆனால், அடுத்த அரை மணி நேரம் தான் வாழ்க்கையின் உண்மையான அனுபவத்தை உணர்ந்தேன். 24 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பார்த்தபோது, கீழே இருந்த பூமி சொர்க்கமாக தெரிந்தது' என்கிறார் ராவத்.
