ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியோர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? ஹிந்து முன்னணி கேள்வி
ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியோர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? ஹிந்து முன்னணி கேள்வி
ADDED : ஆக 12, 2025 05:11 AM

திருப்பூர் : ''சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்திய கமல் மீது நடவடிக்கை எடுக்காமல், அதைக் கண்டித்த நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க முனைவதா?'' என்று ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:
'அகரம் அறக்கட்டளை' விழாவில் பேசிய எம்.பி., கமல், திட்டமிட்ட ரீதியில் சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தியுள்ளார்.
மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசுவோர் மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளது.
கோடிக்கணக்கான ஹிந்துக்களை புண்படுத்திய கமல் மீது போலீசார் ஏன் வழக்கு பதியவில்லை?
ஆனால், கமல் பேச்சை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறிய நடிகர் ரவிச்சந்திரனை மிரட்டும் வகையில், அவர் வன்முறையைத் துாண்டும் வகையில் பேசுவதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.
கமல் மீது நடவடிக்கை எடுக்காமல், ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுப்பது சரியில்லை.
ஏற்கனவே, கமல் மீது பல முறை ஹிந்து முன்னணி புகார் அளித்துள்ளது. கடவுள் ராமரை வைரமுத்து இழிவுபடுத்தியுள்ளார். வரலட்சுமி நோன்பு குறித்து சினிமா இயக்குனர் கரு.பழனியப்பன் இழிவாகப் பேசியுள்ளார்.
கடவுள் அய்யப்பன் பற்றி இழிவாகப் பாடிய இசைவாணி, ஹிந்து மத அடையாளங்களை கொச்சைப்படுத்திய பொன்முடி என பட்டியல் நீளுகிறது.
ஹிந்து மதத்தை இழிவுபடுத்திய இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், கமலை கண்டித்த ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை என்ற ஹிந்து விரோத மனப்பான்மையை தி.மு.க., அரசு கைவிட வேண்டும். ரவிச்சந்திரனுக்கு ஹிந்து முன்னணி துணை நிற்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.