தமிழகத்தில் கொட்டப்படும் கேரள கழிவுகள்; மத்திய மா.க.வா., எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள கழிவுகள்; மத்திய மா.க.வா., எடுத்த நடவடிக்கை என்ன?
ADDED : ஜன 21, 2025 05:32 AM

சென்னை:    'தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?' என்று, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவில் இருந்து ஆபத்தான மருத்துவக் கழிவுகள், திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லுார், பழவூர் கிராமங்களில் கொட்டப்படுவது பற்றி, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நெல்லை மாவட்டத்தின் இரண்டு கிராமங்களில், ஆறு இடங்களில் கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன' என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இழப்பீட்டை வசூல் செய்வதற்கு கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நோட்டீஸ் மட்டுமே அனுப்பி வருகிறது' என்றார்.
அதைத் தொடர்ந்து தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, புற்றுநோய் மருத்துவமனை, தனியார் ரிசார்ட் மீது நடவடிக்கை எடுத்துள்ள கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கழிவுகளை சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கேரளாவில் இருந்து தமிழகத்தில் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில், இது மூன்றாவது வழக்கு. இது தொடர்பாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
கழிவுகளை கொட்டிய நிறுவனங்களிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீடு பெற, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; அடுத்த விசாரணை, வரும் மார்ச் 24ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

