125 சட்டசபை தொகுதிகள் எவை?: காங்.,கில் துவங்கியது விவாதம்
125 சட்டசபை தொகுதிகள் எவை?: காங்.,கில் துவங்கியது விவாதம்
ADDED : நவ 03, 2025 12:38 AM

தமிழக காங்கிரஸ் போட்டியிட, 125 சட்டசபை தொகுதிகளை அடையாளம் காண, அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசித்துள்ள தகவல் வெளி யாகி உள்ளது.
சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, 125 தொகுதிகளை அடையாளம் காண, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
அவை எந்தெந்த தொகுதிகள்; அதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், யார் யாருக்கு எந்தந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது, கூட்டணியில் கேட்கும் தொகுதிகள் கிடைக்காமல் வேறு தொகுதிகள் அளிக்கப்பட்டால், அங்கெல்லாம் எப்படி பணியாற்றுவது என்பது குறித்து, இந்த கூட்டத்தில், 'பவர் பாயின்ட்' வசதியுடன் விவாதிக்கப்பட்டது.
அதாவது, கடந்த 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டசபை தேர்தல்களில், தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள், தோல்வி அடைந்த தொகுதிகள் குறித்தும் முழுமையாக விவாதிக்கப்பட்டது.
முன்னதாக, இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் இளைஞர் காங்கிரஸ் கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்தும், அவர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது
- நமது நிருபர் -.

