ADDED : மே 08, 2025 12:35 AM

'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்த நடவடிக்கை வாயிலாக உலக நாடுகளுக்கு, குறிப்பாக பாகிஸ்தானுக்கு சில முக்கிய செய்திகளை இந்தியா வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2016 மற்றும் 2019ல் நம் படைகள் துல்லிய தாக்குதல்களில் ஈடுபட்டன. அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சில பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஆனால், தற்போது நடத்தப்பட்டுள்ள ஆப்பரேஷன் சிந்துார், இவற்றில் இருந்து வேறுபட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைத் தவிர, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களும் தாக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானை தண்டிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், எதிர்பார்க்காத நேரத்தில் நடத்தப்பட்ட ஒன்று.
சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் உட்பட பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கிறோம் என்று பாகிஸ்தானே ஒப்புக்கொள்ள வைக்கும் வகையில், பல வகைகளில் மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது.
பஹல்காம் தாக்குதல் நடந்து மூன்று வாரங்களில் இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என்ற பயம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தளவுக்கு மிக சிறப்பாக திட்டமிட்டு, மிகப் பெரிய தாக்குதலை நடத்தும் என்று பாகிஸ்தான் அரசு எதிர்பார்த்திருக்காது.
ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக, பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நம் அரசு உறுதிபடுத்தியுள்ளது.
அதனால்தான், பாகிஸ்தானின் ராணுவ தளங்களையோ, பொதுமக்கள் உள்ள பகுதிகளையோ, அதன் பொருளாதாரத்தையோ தாக்காமல், பயங்கரவாதிகள் இருப்பிடங்கள், முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து, இந்தியா தன் இலக்கை உலகுக்கு, குறிப்பாக பாகிஸ்தானுக்கு காட்டியுள்ளது.
'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதற்கு இந்திய ராணுவத்தின் திட்டமிடப்பட்டு, தீவிரப்படுத்தப்படாத, பொறுப்பான பதில் இது' என, நம் ராணுவம் கூறியுள்ளது.
நம் ராணுவம், கடற்படை, விமானப்படை இணைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டாலும், பாகிஸ்தானுக்குள் நுழையாமலேயே நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்து மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்கிறோம் என்பதை உலகுக்கு இந்தியா காட்டியுள்ளது.
அதுபோல, தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் வாயிலாக உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளது.
தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தங்களுக்கு முழு உரிமை உள்ளது என்பதை, இந்த தாக்குதல் வாயிலாக உலக நாடுகளுக்கு மத்திய அரசு திடமாக உணர்த்தியுள்ளது.
மேலும், தற்போதுள்ள நிலைமை வீரியமடையாமல் இருப்பதையே விரும்புகிறோம் என்றும் நம் ராணுவம் கூறியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் விபரீத முடிவுகள் எடுத்தால், அதனால் அது எந்த மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும், நம் படைகள் இந்த தாக்குதல் வாயிலாக உணர்த்தியுள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிராக, இந்தியா பல நடவடிக்கைகளை இதற்கு முன்பும் எடுத்துள்ளது. ஆனால், இந்த ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக, எவ்வாறு சிறப்பாக திட்டமிட்டு, மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் நம் படைகளுக்கு உள்ளது என்பதை இந்தியா பறைசாற்றியுள்ளது.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னையில் தலையிடாதீர்கள் என்பதை, அண்டை நாடுகளுக்கு, குறிப்பாக சீனாவுக்கு உணர்த்துவதும் இந்த தாக்குதல் வெளிப்படுத்தும் செய்தி.
இந்தியாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தன் இலக்குகளை எட்டுவதற்கு என்ன செய்யும் என்பதையும் இதன் வாயிலாக நம் நாடு உலகுக்கு கண்ணாடி போட்டு காட்டியுள்ளது
- நமது சிறப்பு நிருபர் -.