கட்சியினரிடையே நேரு பஞ்சாயத்து; அறிவாலயத்தில் நடந்தது என்ன?
கட்சியினரிடையே நேரு பஞ்சாயத்து; அறிவாலயத்தில் நடந்தது என்ன?
ADDED : ஆக 26, 2025 04:37 AM

மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க.,வில், அடிதடி சம்பவம் அரங்கேறியதால், மாவட்ட செயலர் நிவேதா முருகன் ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் மாவட்ட செயலர் குத்தாலம் கல்யாணம் ஆதரவாளர்கள் இடையே, அமைச்சர் நேரு தலைமையில், சென்னை அறிவாலயத்தில், நேற்று பஞ்சாயத்து நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க.,வினர், மாவட்டசெயலர் நிவேதா முருகன், முன்னாள் மாவட்ட செயலர் குத்தாலம் கல்யாணம் ஆகியோர் தலைமையில், இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இது தவிர, மாவட்ட துணை செயலர் ஞானவேலன், தொழில்நுட்ப அணி மண்டல செயலர் ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நிவேதா முருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிவேதா முருகன், ஸ்ரீதர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை ஐ.டி., அணி பொறுப்பாளர் விக்னேஷ், தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை கண்ட நிவேதா முருகன் ஆதரவாளர்கள், அவரிடம் இருந்து போனை பறித்துள்ளனர். இதையடுத்து, இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுப்பட்டனர்.
அலுவலகத்தின் உள்ளிருந்து, மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய செயலர் முருகமணி, ரத்தம் வடிந்த நிலையில் வெளியேறினார். இரண்டு கோஷ்டியினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பிறந்த மாவட்டம். எனவே, அம்மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அம்மாவட்டத்தில் இருக்கும் துர்கா உறவினர்கள் சிலர், அவருடைய கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதையடுத்து, கட்சி தலைமை இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தியது. இதற்காக, சென்னை அறிவாலயத்தில் நேற்று அமைச்சர் நேரு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமையில், பஞ்சாயத்து நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டச்செயலர் நிவேதா முருகன், முன்னாள் மாவட்ட செயலர் குத்தாலம் கல்யாணம் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் அறிவாலயத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அறிவாலயத்தில் நடந்த பஞ்சாயத்து குறித்து, மயிலாடுதுறை தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
நேற்று நடந்த பஞ்சாயத்தில், டெண்டர் உள்ளிட்ட அரசு பணிகள் பெரும்பாலும், அ.தி.மு.க.,வினருக்கு ஒதுக்கப்படுவதாக, நிவேதா முருகன் மீது எதிர் கோஷ்டியினர் குற்றம் சாட்டினர். முன்னாள் மாவட்டச்செயலர் குத்தாலம் கல்யாணம், தன் மகன் அன்பழகனுக்கு, நிவேதா முருகன் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆகியிருக்கும் பூம்புகார் தொகுதியை கேட்பதால், தனக்கு எதிராக அவதுாறு பரப்புவதாக, நிவேதா முருகன் குற்றம் சாட்டினார்.
இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்டுக் கொண்ட அமைச்சர், இரு தரப்பினரும் இணைந்து, சட்டசபை தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டும். ஒப்பந்தப் பணிகளை, கட்சி மேலிடம் தெரிவிக்கும் நிர்வாகிகளுக்கு மட்டும் பகிர்ந்து அளிக்கப்படும்.
மீண்டும் கோஷ்டி தகராறில் ஈடுபட்டால், இரு தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
ஆனாலும், இரு தரப்பும் சமாதானமாகாததால், அடுத்தடுத்தும் மாவட்ட தி.மு.க.,வில் பிரச்னைகள் வெடிக்கும் என்றே தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

